Published : 22 Sep 2020 01:01 PM
Last Updated : 22 Sep 2020 01:01 PM

கோவிட்-19 சூழலிலும் 296.65 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி

புதுடெல்லி

கோவிட்-19 தொற்று காரணமாக சாதகமற்ற சூழ்நிலையிலும், 2019-20ம் ஆண்டில் சாதனை அளவாக 296.65 மில்லியன் டன்கள் உணவு தானியம் உற்பத்தி செய்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:

பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியும் முறையே 23.15 மற்றும் 33.42 மில்லியன் டன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருத்தி உற்பத்தி 354.91 லட்சம் பேல்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உலகளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெறும். இந்திய வேளாண் வரலாற்றில் இந்தாண்டு ஒரு மைல்கல். செப்டம்பர் வரையிலான இந்தாண்டு காரிப் பருவத்தில் 1,113 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இது வழக்கத்தை விட 46 லட்சம் ஹெக்டேர் அதிகம். நாட்டின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதில் இது நல்ல வாய்ப்பை வழங்குகிறது. இந்த மகத்தான சாதனைக்காக விவசாயிகளுக்கும், மாநில அரசுகளுக்கும் பாராட்டுக்கள்.

கோவிட் முடக்க காலத்தில் விவசாயம் சுமுகமாக நடந்தது. இதற்காக மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. முடக்க காலத்தில் விவசாயத்துக்கு தேவையான அனைத்து விலக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் காரணமாக இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் விவசாயம் சார்ந்த தொழில்கள் 3.4% சதவீத வளர்ச்சியடைந்துள்ளன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் பிரதமரின் ஏழைகள் நலன் உணவுத் திட்டம் ஆகியவை விவசாய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.

பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் 10.19 கோடி விவசாய குடும்பங்கள் பயன் அடைந்தன. அவர்களுக்கு ரூ.9,41,305 கோடி வழங்கப்பட்டது.

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், முடக்க காலத்தில் விவசாயிகளுக்கு ரூ.5,326,7 கோடி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக மற்றும் கேரளாவில் உள்ள மாவட்டங்களில் ஏலக்காய் உற்பத்தி 2018-2019 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளில் குறைந்துள்ளது. வரலாறு காணாத மழை, நீடித்த வறட்சி போன்றவை இதற்கு காரணம். பூச்சி மற்றும் நோய் தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்தன.

மலைப் பகுதிகளில் பயிரிடப்படுவதால், விரிவாக்கத்துக்கும் அதிக வாய்ப்பும் குறைவு. ஏலக்காய் உற்பத்தியை அதிகரிக்க பரிசுத் திட்டத்தையும் வாசனைப்பொருட்கள் வாரியம் அறிவித்துள்ளது. சிறந்த ஏலக்காய் விவசாயிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2வது பரிசாக ரூ.50 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 4.79 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் மண்டாரின், கின்னோவ் வகை ஆரஞ்சு பயிரிடப்பட்டது. மத்தியப் பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் அரியானாவில் ஆரஞ்சுகள் அதிகம் பயிரிடப்பட்டன.

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய, பிரதமரின் ஆஷா திட்டம் கொண்டுவரப்பட்டது. நெல், கோதுமை, சோளம், நிலக்கடலை உட்பட 22 பயிர்களுக்கு அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்துள்ளது.

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு அமைச்சரவைக் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு, பயிர் உற்பத்தியை மேம்படுத்துதல், கால்நடை உற்பத்தியை மேம்படுத்துதல், திறமையான வழிமுறைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செலவை குறைப்பது, விவசாயிகள் பெறும் விலையை அதிகரிப்பது, பண்ணை சாரா முறைகளுக்கு மாறுவது உட்பட 7 யுக்திகளை பரிந்துரைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x