

இந்திய பங்குச் சந்தைகள், வாரத்தின் முதல் நாளான திங்களன்று கடும் சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையில் 800 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 38,034 புள்ளிகளானது.
தேசிய பங்குச் சந்தையில் 250 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 11,250 என்ற நிலையை எட்டியது. சர்வதேச சந்தையில் குறிப்பாக சில ஐரோப்பிய நாடுகளில் பங்குச் சந்தைகள் சரிந்தன. இது இந்திய சந்தையிலும் எதிரொலித்தது. இதன் விளைவாக பங்குச் சந்தைகள் கடுமையான சரிவைச் சந்தித்தன.
ஐரோப்பிய நாடுகளில் டென்மார்க், கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கரோனா பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பங்குச் சந்தைகளில் சரிவு காணப்பட்டது. 49 நாடுகளில் பங்குச் சந்தைகள் 0.5 சதவீத அளவுக்கு சரிவைச் சந்தித்தன. பொருளாதார சரிவிலிருந்து மீள்வதற்கு அரசு கட்டுப்பாடுகளை தளர்த்திய போதிலும் அது பங்குச் சந்தை எழுச்சிக்கு போதுமானதாக அமையவில்லை.
உற்பத்தித் துறை, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. வங்கித் துறை சார்ந்த பங்குகள் மற்றும் தனியார் நிதி நிறுவன பங்குகள் 3 சதவீத அளவுக்குச் சரிந்தன.
தேசிய பங்குச் சந்தையில் உலோக பங்குகள் 5.5 சதவீதம் சரிந்தன. இதில் அதிகபட்சமாக ஹிண்டால்கோ பங்குகள் 9 சதவீதம் சரிந்தன. கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் மட்டும் 0.84 சதவீதம் உயர்ந்தன.