

சரக்கு மற்றும் சேவை வரியின் மூலம் வரும் வருமானம் குறைந்துள்ளதால் கடன் வாங்க மாநிலங்களுக்கு வசதியளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் கூறினார்.
மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் கூறியதாவது:
கோவிட்-19 பெருந்தொற்று பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தியுள்ள எதிர்மறை தாக்கத்தை குறைப்பதற்காக பல்வேறு நிதி நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது.
தற்சார்பு இந்தியா தொகுப்பின் கீழ், மூத்தக் குடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு நிதியுதவி, இலவச எரிவாயு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பயனாளிகளுக்கு ஊதிய உயர்வு, சுய உதவிக் குழுக்களுக்கு பிணையில்லா கடன் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
2020 செப்டம்பர் 7 வரை, சுமார் 42 கோடி ஏழை மக்கள் ரூ 68,820 கோடி நிதியுதவியை பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கிழ் பெற்றுள்ளனர்.
பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இலவச ரூபே அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் விபத்து காப்பீடாக ரூ 1 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. இது 2018 ஆகஸ்ட் 28 முதல் ரூ 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரியின் மூலம் வரும் வருமானம் குறைந்துள்ளதால் (சுமார் ரூ 97,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது), கடன் வாங்க மாநிலங்களுக்கு வசதியளிக்கப்படுகிறது.
நேரடி வரி விவாத் சே விஸ்வாஸ் அமல் படுத்தப் பட்டதில் இருந்து 2020 செப்டம்பர் 8 வரை 35,074 வரி செலுத்துவோர் அதை பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.