

இந்திய பார்மா துறையில் முன்னணி நிறுவனமான சன் பார்மா நிறுவனம் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இன்சைட் விசன் (InSite Vision) நிறுவனத்தை வாங்குவதற்கு முடிவெடுத்திருக்கிறது. இந்த இணைப்பின் மதிப்பு 4.8 கோடி டாலர்கள் ஆகும். இன்சைட் விசன் நிறுவனத்தின் பங்குகளை 30 சதவீதம் அதிக விலை கொடுத்து சன்பார்மா வாங்குகிறது.
கண் சிகிச்சை ஒரு முக்கியமான பிரிவாகும். அமெரிக்காவில் இந்த பிரிவில் மேம்பட இந்த நிறுவனத்தை கையகப்படுத்துவது முக்கியமானது என்று சன்பார்மா நிறுவனத்தின் வட அமெரிக்கா தலைமைச் செயல் அதிகாரி கல் சுந்தரம் கூறினார்.
கடந்த ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில் இன்சைட் நிறுவனம் 38 லட்சம் டாலர் வருமானத்தை ஈட்டியது. அதேசமயம் இந்த நிறுவனத்தின் நிகர நஷ்டம் 75 லட்சம் டாலராகும்.
இந்திய பார்மா நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்களை பலப்படுத்திக்கொள்ள அமெரிக்க நிறுவனங்களை வாங்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஜூலை மாதம் லுபின் நிறுவனம் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் காவிஸ் பார்மா நிறுவனத்தை 88 கோடி டாலர் கொடுத்து வாங்கியது.
மும்பையை சேர்ந்த சிப்லா நிறுவனம் அமெரிக்காவில் இரண்டு பார்மா நிறுவனங்களை சமீபத்தில் கையகப்படுத்தியது. இதன் மதிப்பு 55 கோடி டாலர்கள் ஆகும். நேற்றைய வர்த்தகத்தில் இரண்டு சதவீதம் உயர்ந்து சன்பார்மா பங்குகள் வர்த்தகமானது. வர்த்தகத்தின் முடிவில் 2.38% உயர்ந்து ரூ 887.20-ல் முடிந்தது.