

தமிழகத்தில் சாகர்மாலாவின் 50 திட்டங்கள் நிலுவையில் இருப்பதாக மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் தெரிவித்தார். இத்தகவலை அவர், மக்களவையில் திமுக எம்.பி.யான கனிமொழி எழுப்பிய கேள்விக்கானப் பதிலில் அளித்தார்.
தூத்துக்குடி எம்.பி.யான கனிமொழி தனது கேள்வியில், ’‘சாகர்மாலா திட்டத்தின் செயலாக்கம் தமிழகத்தில் எந்த அளவுக்கு உள்ளது? தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது?
அத்திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட கடலோர மாவட்டங்களில் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதா?’ ’எனக் குறிப்பிட்டார்.
இதற்கு மத்திய கப்பல் போக்குவரத்துக்கான இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) மன்ஷுக் மாண்டவியா எழுத்துபூர்வ பதிலில் கூறியிருப்பதானது:
சாகர்மாலா திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கென்று, ரூ.1,06,480 கோடி மதிப்பிலான 86 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றில், ரூ.33,545 கோடி மதிப்பிலான 36 திட்டங்கள் செயல்படுத்தி முடிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 72,935 கோடி ரூபாய் மதிப்பிலான 50 திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளன.
இத்திட்டங்களை செயல்படுத்தும் பல்வேறு நிறுவனங்கள், தேவையான தடையில்லா சான்றுகள் பெறுவது, பொதுமக்கள் கருத்து கேட்பது, திட்டங்களை ஆய்வு செய்கையில் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்வது போன்றவற்றை செய்து வருகின்றன.
இவ்வாறு இணை அமைச்சர் தெரிவித்தார்.