Published : 17 Sep 2020 04:38 PM
Last Updated : 17 Sep 2020 04:38 PM

தற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல், தேனீ வளர்ப்பு திட்டங்கள்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி

தற்சார்பு இந்தியாவுக்கு வலு சேர்க்கும் விதத்தில் ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல் மற்றும் தேனீ வளர்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஊதுவத்தி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோருக்கான ஆதரவை விரிவுபடுத்தி இரட்டிப்பாக்குவதாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இந்த முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் விதமாக, மண்பாண்டம் செய்தல் மற்றும் தேனீ வளர்ப்பு ஆகியவற்றுக்கான இரு திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை தற்போது வெளியிட்டுள்ளது.

சுய-வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் அமைச்சகத்தின் இந்த புதிய திட்டங்கள், அடித்தள பொருளாதாரத்துக்கு புத்தாக்கம் அளிக்கும் விதத்திலும், தற்சார்பு இந்தியா இயக்கத்துக்கும் பங்காற்றும் வகையிலும் அமைந்துள்ளன.

பானை செய்யும் சக்கரம், களிமண் கலப்பான் உள்ளிட்ட இயந்திரங்களை மண்பாண்டத் தொழிலுக்கு அரசு வழங்கும். மேலும், திறன் வளர்ப்பு பயிற்சி, சந்தைகளுடன் தொடர்பு ஏற்படுத்துதல் ஆகியவையும் அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 6075 மண்பாண்ட கலைஞர்கள்/ ஊரகப் பகுதிகளில் வேலையில்லாமல் இருப்போர்/இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்.

தேனீ வளர்ப்புக்காக தேனீப் பெட்டிகள், உபகரணங்கள் ஆகியவற்றை அரசு வழங்கும். பல்வேறு மையங்களின் மூலம் ஐந்து நாள் பயிற்சியும் அளிக்கப்படும். இவை பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.

இத்திட்டங்களெல்லாம் 2020-21-ஆம் ஆண்டில் ரூ 13 கோடி மதிப்பீட்டில் தொடங்கும் என்று சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x