Published : 17 Sep 2020 07:44 AM
Last Updated : 17 Sep 2020 07:44 AM

வளர்ச்சி ஸ்திரமாகவும், மீட்சி படிப்படியாகவும் நிகழும்; பணப்புழக்கத்தை ரிசர்வ் வங்கி உறுதி செய்யும்: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தகவல்

சக்திகாந்த தாஸ்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள தேக்க நிலையைப் போக்க தொழில் துறைக்குத் தேவையான பணப்புழக்கம் கிடைக்க ரிசர்வ் வங்கி அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். தொழில் துறை ஊக்குவிப்பு மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு வழியேற்படுத்த முயல்வதாக அவர் குறிப்பிட்டார்.

ஃபிக்கி ஏற்பாடு செய்திருந்த வீடியோ மூலமான கருத்தரங்கில் பேசிய போது அவர் இக்கருத்தை தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 23.9 என்ற நிலைக்கு சரிந்தது. இந்நிலையில் ஆர்பிஐ கவர்னர் தெரிவித்துள்ள கருத்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கருத்தரங்கில் சக்திகாந்த தாஸ் மேலும் பேசியதாவது:

ஜிடிபி சரிவானது நாட்டில் கரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள மிகப் பெரும் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. இரண்டாம் காலாண்டில் பொருளாதாரம் ஸ்திரமடைவதற்கான காரணிகள் சில தென்படுகின்றன. வேளாண் சார்ந்த நடவடிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. நுகர்வு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன. அதேசமயம் உற்பத்தித் துறை மற்றும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட காரணிகளில் ஸ்திரமான சூழல் உருவாக வேண்டும்.

பிற துறைகளில் நிலவி வந்த தேக்க நிலை மாறி வருகிறது. சரிவு ஏற்பட்டஅளவுக்கு மீட்சி உடனடியாக ஏற்படாது. சில குறிப்பிட்ட துறைகளில் ஜூன், ஜூலை மாதங்களில் சம நிலை எட்டப்பட்டது. அனைத்து சூழல்களுடன் ஒப்பிடுகையில் மீட்சியானது படிப்படியாகத்தான் நிகழும். அதுவும் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் முழுமையாக நீங்கும் போதுதான் சாத்தியமாகும்.

கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள தாக்கத்தில் இருந்து மீள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொழில் துறைக்கு செய்வதற்கு ரிசர்வ் வங்கி ஆயத்தமாகவே உள்ளது. சர்வதேச அளவில் கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பால் உருவாகியுள்ள புதிய வாய்ப்புகளை தொழில் துறையினர் கண்டறிந்து அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு சக்தி காந்த தாஸ் கூறினார்.

பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கை விவரங்களை தனது உரையின் இடையே தாஸ் பட்டியலிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x