

எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதில் இந்திய முக்கிய பங்கு வகிக்கும் என கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார். இதன் மூலம் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும் என்றார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவை தொழில்முனைவுக்கு ஏற்ற இடமாக மேம்படுத்த பிரதமர் மோடி எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியவை. பல விஷயங்கள் மோடியின் செயல்பாடுகளால் சாத்திய மாகியுள்ளன. மோடி தொழில்நுட்பத்தை சரியாக புரிந்து கொண்டிருக்கிறார்.
அதை பெரிய அளவில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துவருகிறார். இந்த நடவடிக்கை இப்போது இந்தியாவுக்கு தேவையாகும். மக்கள் தங்களை மேம்படுத்தி வருகிறார்கள். தங்களுக்கு பிடித் தவர்களுக்கு வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்து வருகிறார்கள். இந்தியாவில் உள்ள பல பெண்கள் யூடியூபில் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்கள்.
இந்தியாவில் 3000-க்கும் அதிகமான புதிய நிறுவனங்கள் உள்ளன. பல அளவுகோள்களின் அடிப்படையில் புதிய நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருவது இந்தியாவில்தான். பிளிப்கார்ட், ஹைக், ஜொமேடோ, ஸ்நாப்டீல் ஆகிய சில நிறுவனங்கள் இதற்கு உதாரணங்கள். இவை இந்திய அளவிலான வெற்றி நிறுவனங்கள் அல்ல; சர்வதேச வெற்றி நிறுவனங்கள் ஆகும். இந்நிறுவனங்கள் மூலம் பல வேலை வாய்ப்புகள் உருவா கின்றன.
இந்தியாவில் நடந்து வரும் தொழில்முனைவு நடவடிக்கைகள் குறித்து கூகுள் பெருமை கொள்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் இணைந்து பங்கேற்ற விரும்புகிறோம். கூகுள் தலைமையகத்துக்கு மோடி வரும் போது பல திட்டங்களை அறிவிக்க இருக்கிறோம். இவ்வாறு சுந்தர் பிச்சை தெரிவித்தார்.