

எப்எம்சிஜி துறையை சேர்ந்த ஐடிசி நிறுவனம் 2,500 கோடி ரூபாயை தமிழகத்தில் முதலீடு செய்ய இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தேவேஷ்வர் தெரிவித்தார். உணவு பதப்படுத்துதல் மற்றும் ஓட்டல் துறையில் இந்த முதலீடு செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்காக 25,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளோம் என்றார்.
ஏற்கெனவே திருச்சிராப்பள்ளியில் உணவு பதப்படுத்தும் ஆலை உள்ளது. இதில் 800 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறோம்.
தமிழகத்தில் இருந்து பிங்கோ சிப்ஸ், யப்பி நூடுல்ஸ், நெய் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்ய இருக்கிறோம். என்னுடைய கார்ப்பரேட் வாழ்க்கை தமிழ்நாட்டில்தான் தொடங்கியது. இங்கு 9 ஆண்டுகள் பணியாற்றினேன். மேலும் காகித உற்பத்தியிலும் களம் இறங்க திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.
தவிர மூன்று வருடங்களுக்கு முன்பு ஐடிசி ஓட்டலை முதலமைச்சர் திறந்து வைத்ததை தேவேஷ்வர் நேற்று நினைவு கூர்ந்தார். அப்போது ஓட்டலை தமிழகத்தில் உள்ள மற்ற நகரங்களுக்கும் விரிவு செய்யமாறு கேட்டிருந்தார். இப்போது கோவையில் எங்களது ஓட்டலை விரிவு செய்ய இருக்கிறோம் என்று தேவேஷ்வர் தெரிவித்தார்.