Published : 15 Sep 2020 07:01 AM
Last Updated : 15 Sep 2020 07:01 AM

பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி வழங்க ஒப்புதல் கோருகிறது மத்திய அரசு

பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை கோரியுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பெரும்பாலானோரின் தொழில், வருமானம், வேலை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் கடனைத் திரும்ப செலுத்த முடியாத சூழலில் உள்ளனர். இதன் காரணமாக வங்கிகள் வழங்கிய கடன்கள் வாராக் கடன்களாகும் நிலை உருவாகியுள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி இந்திய வங்கித் துறையின் மொத்த வாராக்கடன் விகிதம் 2021 மார்ச் மாதத்தில் 12.5 சதவீதமாக உயரும் எனக் கூறியுள்ளது. மார்ச் 2020நிலவரப்படி வங்கிகளின் வாராக்கடன் 8.5 சதவீதமாக இருந்தது.

இந்த வாராக்கடன் உயர்வு சுமைகளை சமாளிக்கவும், தொடர்ந்து வங்கிகளின் அன்றாடஅலுவல்களுக்கான செலவுகளுக்காகவும் பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடிவழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.3.5 லட்சம் கோடி நிதி உதவி செய்துள்ளது. ஆனால், கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வங்கித் துறைக்கென எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. மாறாக நிதி சந்தையிடம் வங்கிகள் நிதி ஆதரவைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க பொதுத் துறை வங்கிகளுக்குத் தேவையான நிதி உதவி செய்யப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருந்தது.

அதன்படி தற்போது பொதுத் துறை வங்கிகள் தங்களின் வாராக்கடன் சுமையைச் சமாளிக்கும் வகையில் நிதியுதவி அளிக்கமத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை நாடாளுமன்றத்திடம் கேட்டுள்ளது.

மேலும் நடப்பு நிதி ஆண்டில் அரசின் செலவினங்களுக்காக கூடுதலாக ரூ.1.67 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைகேட்டுள்ளது. இதில் ரூ.46,602 கோடி வரி வருவாய் ஈட்ட முடியாமல் நெருக்கடியில் இருக்கும்மாநிலங்களுக்கு வழங்க உள்ளதாகவும், ரூ.10 ஆயிரம் கோடி உணவுப் பொருட்களுக்கான மானிய செலவுகளுக்காக ஒதுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி இந்திய வங்கித் துறையின் மொத்த வாராக்கடன் விகிதம் 2021 மார்ச் மாதத்தில் 12.5 சதவீதமாக உயரும் எனக் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x