

இந்தியாவுக்கு வரி தொடர்பான விவரங்களைத் தருவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று இந்தியா வந்துள்ள மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் தெரிவித்தார். நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அன்னியச் செலாவணி மோசடி குற்றங்களுக்கு மொரீஷியஸ் தளமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு தவறானது என்று குறிப்பிட்டார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராம்கூலம், இந்தியாவுக்கு வரி தொடர்பான தகவல்களை தருவதில் பிரச்சினை இல்லை என்று குறிப்பிட்டார். எந்த ஒரு தனிநபரும் தங்கள் நாட்டு சட்டத்தை முறைகேடான நடவடிக் கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
மோடியுடன் பேச்சு நடத்திய பிறகு மொரீஷியஸுக்கு வருமாறு நரேந்திர மோடிக்கு தாம் அழைப்பு விடுத்ததாகவும் குறிப்பிட்டார். இரு நாடுகளிடையே உள்ள வரி விதிப்பு ஒப்பந்தம் குறித்து, இப்பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணப்படும் என்றார். இரு நாடுகளிடையிலான வரி ஒப்பந்தம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.
இந்தியா குறிப்பிட்ட சில விதிமுறைகளை மொரீஷியஸ் ஏற்காததே இதற்குக் காரணமாகும். மொரீஷியஸ் மூலமாக இந்தியாவுக்குள் வரும் முதலீடு களின் வழியைக் கண்டறிய இனி வழியேற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். இந்தியாவுடனான வரி ஒப்பந்தத்துக்கு தீர்வு காண புதிய பரிந்துரைகளை மொரீஷியஸ் அளித்துள்ளதாக ராம் கூலம் குறிப்பிட்டார்.
இரு நாடுகளிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த இருநாடுகளின் பிரதமர் அலுவலகங்களில் சிறப்பு பிரிவு ஏற்படுத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறந்த ஆலோசனைகளை செயல்படுத்த உள்ளதாக அவர் கூறினார்.
மொரீஷியஸில் இந்திய வம்சாவளியினர் அதிகம் வாழ்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர். இப்போது பிரதரமாக உள்ள ராம் கூலத்தின் தந்தை காலஞ்சென்ற சீவுசாகர் ராம்கூலம் (சாச்சா ராம்கூலம் என அழைக்கப்படுபவர்) மொரீஷியஸின் சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்டவர். இவர்தான் மொரீஷியஸின் முதல் பிரதமர்.
மொரீஷியஸின் தேசத் தந்தை என்று அழைக்கப்படுபவர் சீவுசாகர் ராம்கூலம். இவர் தொழிலாளர் கட்சியை உருவாக்கி தொழிலாளர் உரிமையைக் காக்க போராடியவர். 1968-ம் ஆண்டு இங்கிலாந்திடமிருந்து நாடு சுதந்திரமடைய பெரிதும் காரணமாயிருந்தவர்.