

ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான தற்போதைய காலவரம்பை, மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்கு நவம்பர் மாதத்துக்குள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என விதிமுறை முன்பு இருந்தது. தற்போது மத்திய அரசின் அனைத்து ஓய்வூதியதாரர்களும், 2020 நவம்பர் 1-ம் தேதி முதல், 2020 டிசம்பர் 31ம் தேதி வரை தாக்கல் செய்யலாம்.
80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள், 2020, அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம். இந்த நீட்டிக்கப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் தடையின்றி தொடர்ந்து வழங்கப்படும்.
கோவிட் -19 தொற்று நேரத்தில் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டாக்டர்.ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்.
மேலும், ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், வீடியோ மூலம் வாடிக்கையாளரை அடையாளம் காணும் முறையை (V-CIP) ஒப்புதல் அடிப்படையில் ஓய்வூதியம் விநியோகிக்கும் வங்கிகள் பின்பற்றலாம் என கூறியிருந்தது. வங்கிகளில் கூட்டத்தை தவிர்க்க, இதே முறையை ஆயுள் சான்றிதழ் பெறுவதற்கும், முடிந்தளவு பயன்படுத்துமாறு வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை அளிக்கும் முறையை ஓய்வூதிதாரர்கள் நலத்துறை ஊக்குவித்து வருகிறது.