Last Updated : 06 Sep, 2015 12:38 PM

 

Published : 06 Sep 2015 12:38 PM
Last Updated : 06 Sep 2015 12:38 PM

வணிக நூலகம்: உயர்வது உங்கள் எண்ணங்களால்

நிலையான வெற்றிக்கு சுற்றுபுறச் சூழலை, மாற்றங்களை, நிலை யில்லா தன்மைகளை, குழப்பங் களை நிறுவனங்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பது குறித்து எழுதப்பட்டதுதான் இந்த புத்தகம். COLLINS AND HANSAN என்ற கலிபோர் னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கள் 9 ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை அறிவித்திருக்கிறார்கள்.

2008-ம் ஆண்டுக்கு முன்பாக பொருளாதார வீழ்ச்சியின் வெளிப் பாடாக நடைபெற்ற பல்வேறு நிகழ்வு களை ஆய்வு மூலமும் ஆதாரங் களுடனும் தெளிவாக எடுத்து கூறி யுள்ளார்கள். ஆயினும் வணிக உலகத் தில் வேகமான மாற்றங்களுக்கும் எதிர் பாராத இறக்கங்களுக்கும் ஏராளமான காரணிகளும், காரணங்களும் உள்ளன. அவைகளை எல்லாம் தாண்டி தொலை நோக்கு பார்வையில் பொருளாதார சரிவு மற்றும் ஏற்றங்களை கணக்கில் கொண்டு நீண்டகால உத்திகளுக்கு சில வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றையும் விரிவாக காண்போம்.

15 ஆண்டுகளுக்கு மேல்நிலை யில்லாத சூழ்நிலைகளிலும் நிலையாக நின்று பங்குதாரர்களுக்கு 10 மடங்கிற்கு மேல் கொடுத்த சில நிறுவனங்களும் அவை எவ்வாறு சாதித்தன என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. ANGEN, BIOMET, INTEL, MICROSOFT, PROGRESSIVE INSURANCE, SOUTH WEST AIRLINES. STRYKER என்ற இந்த நிறுவனங்களை GENENTECH, KIRSEHNER, AMD, APPLE, SAFECO, PSA மற்றும் UNITED STATES SURGICALS என்ற நிறுவனங்களோடு ஒப்பிட்டு வெற்றி பெற்ற நிறுவனங் களின் தனித்தன்மையை தெரிவித்திருக் கிறார்கள்.

2002ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் வெற்றி பெற்ற நிறுவனமாகவும் ஆப்பிள் அந்த அளவு வெற்றி பெறாத நிறுவனமாகவும் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால் 2012 2014 ல் கால சக்கரம் வேகமாக சுழன்று இட மாறுதலில் ஆப்பிள் வெற்றி பெற்ற நிறுவனமாகவும் மைக்ரோசாப்ட் குறைந்த அளவு வெற்றி பெற்ற நிறுவனமாகவும் மாறி விட்டன.

வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது யார்?

நிறுவனங்கள் தாங்களாகவே வெற்றியையும், தோல்வியையும் தேர்ந்தெடுப்பது இல்லை. வழிநடத்தும் தலைவர்களும், அர்பணிப்பு உணர்வு உள்ள மற்ற நபர்களும் இரு வேறு இலக்கை அடைய முழு மூச்சாய் உழைக்கிறார்கள். வெற்றி பெற்ற தலைவர்கள் பெரும்பாலும் தொலைநோக்கு பார்வை உடையவர்களாக இருக்கிறார்கள். மிகவும் முயற்சி செய்பவர்களாக இருக்கிறார்கள் என்ற கூற்றுக்களை புறம் தள்ளி அனுபவபூர்வமாகவும் ஒழுக்க மேம்பாட்டுடனும், ஆதாரங்களின் அடிப்படையிலும் இருக்கிறார்கள். மேலும் குருட்டு தைரியமும், உடனடி வெற்றிகளும் தவிர்க்கிறார்கள். எல்லோரும் எண்ணுவதைப் போல வெற்றி பெற்ற நிறுவனங்கள் புதுமை புகுத்தும் நிறுவனங்களாக இல்லை. சில நேரங்களில் புதுமையைக் காட்டிலும் வளமையே சிறந்தது என பயணிக்கிறார்கள்.

புதுமை புகுத்தலை படிப்படியாக வும் பல இடங்களிலும் செயல்பட அனுமதித்து நேர்மறை முடிவுகள் அளிக்கும் நிகழ்வுகளைத் தேர்ந் தெடுத்து, வெற்றிக் காரணிகளாக மாற்றுகிறார்கள். பெருவாரியான நிறு வனங்களில் நிறுவனங்களுக்குள்ளான மாறுதல்களை வெளிச்சூழலில் ஏற்படும் மாற்றங்களுக்கு உகந்ததாக ஏற்றுக்கொள்வது இல்லை. 10 மடங்கு ஈவுத்தொகையை முதலீட்டாளர்களுக்கு வாரி வழங்கிய நிறுவனங்கள் வெளி உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கு குறைந்த அளவிலேயே செவி மடுத்துள்ளன.

1911ம் ஆண்டு ரால்ட் அமுட்சென் மற்றும் ராபர்ட் பால்கன் ஸ்காட் என்ற இருவரும் தென் துருவ ஆய்வுக்கும் சோதனைகளுக்கும் புறப்பட்டு சென்றார்கள். முதலாமவர் (ரால்ட் அமுட்சென்) இலட்சிய குறிக்கோள்களுடன் இலக்குகளை நிர்ணயித்து தன் வழி தனி வழியாக முன்னேறிக் கொண்டிருந்தார். அதே சமயத்தில் மிகவும் கவனமாக உற்சாக மிகுதியில் ஒரு நாள் ஓடியும், ஒரு நாள் துவண்டும் போகாமல் சீரான போக்கில் ஒழுக்கம் சார்ந்த உத்திகளை மட்டுமே பயன்படுத்தினார். இது ஏறத்தாழ பத்து மடங்கு ஈவுத்தொகை முதலீட்டாளர்களுக்கு வழங்கிய நிறுவனங்களின் தலைவர்கள் பின்பற்றிய உத்திகளை ஒத்ததாகும்.

மாறாக இரண்டாமவர் (ராபர்ட் பால்கன் ஸ்காட்) நல்ல உணர்வு உள்ள நாட்களில் அளவுக்கு அதிகமாக ஓடி ஆடியும், நல்ல உணர்வு இல்லாத நாட்களில் இலக்கை எட்டாமலும், எதிர்மறையான எண்ண குவியல்களில் விளையாடியும் ஒரு வழியாக போய் சேர்ந்தார். இருவருமே இலக்கை அடைந்தார்கள். ஆனால் எப்படி என்பதில் தான் முக்கியத்துவம் அடங்கியுள்ளது. இரண்டாவதாக குறிப்பிட்ட சில நிறுவனங்கள் 15 ஆண்டுகளில் வெற்றியை தக்கவைத்துக் கொள்ளாத நிறுவனங்கள் இந்த பாணியை தான் பின்பற்றியது என நூலாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வெற்றி நிறுவனங்களின் உத்திகள்

இன்டெல் நிறுவனத்தை சேர்ந்த ஆண்டி குரோவ் என்பவர் நினைவு சில்லுகள் (MEMORY CHIPS) தேவையில்லை என்ற முடிவை 1985ல் எடுத்தாலும் தரவுகளின் அடிப்படையில் நிகழ்வுகளின் பலனாக நிதானித்த முடிவை எடுத்து வரலாற்றில் இடம் பிடித்தார். சவுத் வெஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் கெல்லர் பொருளாதார பின்னடைவு இல்லாத நேரங்களிலும் அதை எதிர்பார்த்து அதற்கு தகுந்தார் போல் தொலைநோக்குப் பார்வையில் செயல்பட்டதால் இன்றும் வெற்றி வரிசையில் அந்த நிறுவனம் நிற்கிறது.

நூலாசிரியர்களின் இந்த முடிவுகள் விமர்சனத்தை வரவேற்கின்றன. ஏனென் றால், ஏதோ ஜாதக கட்டத்தில் இருப்பதை போல இப்படி இருந்தால் அப்படி ஆகலாம் என்று கணித்து சொல்வதை போல தோற்றமளிக்கின்றது. ஆனால், இரண்டு வகையான நிறுவனங்களில் இருந்த நிறுவன தலைவர்களும் சீரான, ஒழுக்கமான, விவேகமான, தைரியமான முடிவுகளை எடுத்துள்ளார்கள். ஆனால், அதிக வெற்றியோ, குறைந்த வெற்றியோ முடிவாக வெற்றிக்கு இவை காரணிகளாக இருப்பதை யாரும் மறுக்கவில்லை.

மாறாக இந்த காரணிகள் இல்லா மல் 10 பங்கு ஈவு தொகையை முதலீட் டாளர்களுக்கு வழங்கும் பெரு வெற்றி பெற்ற நிறுவனங்கள் இது போன்ற தலைவர்களை பொறுப்பில் அமர்த்தி இருக்கின்றனவா என்பது மிக பெரிய கேள்வி.

ஆனால், 2002ல் மைக்ரோசாப்ட் நிறுவனம் பெரு வெற்றி பெற்ற ஒன்று. ஆப்பிள் நிறுவனமோ இலக்கை தொலைத்து புதுமையை தேடிக்கொண் டிருந்த நிறுவனம். ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற நிறுவன தலைவர் மீண்டும் பொறுப்பேற்று தோல்வியில் தவித்துக் கொண்டிருந்த நிறுவனத்தை மீட்டு வெற்றியின் உச்சிக்கே கொண்டு வந்திருக்கிறார். அதற்கு காரணமாக சொல்லப்படும் காரணிகள் தைரியமான முடிவு, புதுமை புகுத்துதல், தொலைநோக்கு எண்ணம், தற்புகழ்ச்சி ஆகியன ஆகும். பணிவு, அடக்கம், சீரான ஒழுங்கு ஆகியவை ஸ்டீவ் ஜாப்ஸிடம் இருந்ததா என்ற கேள்விக்கு விடையில்லை. ஆனால், வெற்றியடைந்தாரா இல்லையா என்ற கேள்விக்கு மகத்தான வெற்றிமட்டுமின்றி முதலீட்டாளர்களுக்கு வாரி வழங்கி யதையும் ஒப்புக் கொள்ளதான் வேண்டும்.

இந்த ஒரு உதாரணத்தில் வேண்டு மானால் தற்புகழ்ச்சி மற்ற காரணிகளை புறம் தள்ளியிருக்கலாம். ஆனால் பொது ரீதியாக பின் சொல்லிய காரணிகளே வெற்றியின் முகட்டுக்கு முட்டி தள்ளும் என்ற ஆசிரியர்களின் கூற்று ஏற்கத்தக்கதே. அதே நேரத்தில் தனிமனிதனாக இல்லாமல் நிறுவன தலைவராக சீரான ஒழுக்கத்தை முதலில் கொண்டு வந்து, அதன் பிறகுதான் ஐ-டியூன், ஐபோன், ஐபாட் ஆகியவைகளை சந்தைக்கு கொண்டு வந்த ஜாப்ஸ் உண்மையிலேயே சாதித்த நிறுவன தலைவர் என்றால் மிகையில்லை.

ஆக இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது இது சரியா இப்படியும் இருக்குமா என்ற கேள்விகளை நூலாசிரியர்கள் பின்புலத்தில் லேசாக எழுப்பிவிட்டு ஆய்வு முடிவுகளால் “பொடேர்” என்று அடித்து இது இப்படி தான் என்று சொல்லும் பாணி புத்கத்திற்கு வலுசேர்கிறது.

எண்ணங்களுக்கு மெருகு ஏற்றுக் கிறது. முன்னேறும் முயற்சிகளைத் தூண்டி விடுகிறது. தலைமை பண்புகளை வளர்த்துக் கொண்டு நிறுவன தலைவர்களாக சாதிக்க வேண்டும் என்பவர்களுக்கு இந்த நூல் ஒரு அகல் விளக்கு. வெளிச்சம் தரும். விவேகத்தை இணைத்து வழிகண்டு வெற்றி படிக்கட்டுக்களில் ஏறுங்கள். அரிதான, அழுத்தமான, ஆழந்த சர்ச்சைக்குரிய செய்திகள் இந்த புத்தகத்தில் நிறைந்து கிடக்கின்றன. யாரேனும் வெற்றியின் முகட்டை அடை யும் பொழுது உங்களை வரவேற்கக் காத்திருக்கிறோம் வாருங்கள்..

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x