

இந்தியாவில் செய்யப்படும் அந்நிய நேரடி முதலீடு 2013-14ம் நிதி ஆண்டில் 8 சதவீதம் அதிகரித்து 2,430 கோடி டாலராக இருப்பதாக தொழிற்கொள்கை மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த 2012-13ம் நிதி ஆண்டில் 2,240 கோடி டாலர் இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டது.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 353 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு வந்தது. ஆனால் 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 152 கோடி டாலர் முதலீடு மட்டுமே வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த நிதி ஆண்டில் சேவை துறையில் அதிகபட்சமாக 222 கோடி டாலர் முதலீடு வந்தது. இதற்கடுத்து ஆட்டோமொபைல் துறையில் 151 கோடி டாலர், தொலைத் தொடர்புத் துறையில் 130 கோடி டாலர், பார்மா துறையில் 127 கோடி டாலர் மற்றும் கட்டுமானத்துறையில் 122 கோடி டாலர் முதலீடு இந்தியாவுக்கு வந்திருக்கிறது.
நாடுகளின் அடிப்படையில் பார்த்தால் சிங்கப்பூரில் இருந்து 598 கோடி டாலர், மொரிஷியஸில் இருந்து 485 கோடி டாலர் இங்கிலாந்தில் இருந்து 321 கோடி டாலர் மற்றும் நெதர்லாந்தில் இருந்து 227 கோடி டாலர் முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது.