

நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வாநிதி சம்வாத் இத்திட்டத்தின் மூலம் 7% வரை வட்டி மானியம் பெற முடியும் எனவும், ஓராண்டுக்குள் கடனை திருப்பிச் செலுத்தினால் கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குவதற்காக பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
4.5 லட்சம் நடைபாதை வியாபாரிகள், இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டனர். இவர்களில் 1.4 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு ரூ.140 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த நடைபாதை வியாபாரிகளுடன் ‘ஸ்வாநிதி சம்வாத்’ நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மீண்டும் தொழில் தொடங்க நடைபாதை வியாபாரிகள் மேற்கொண்ட முயற்சிகள், அவர்களின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பை பாராட்டினார்.
கோவிட் தொற்றையும் பொருட்படுத்தாமல், 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளை அடையாளம் கண்டு, 2 மாதத்துக்குள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு மத்தியப் பிரதேச அரசு மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
இத்திட்டம் 7 சதவீதம் வரை வட்டி தள்ளுபடி வழங்குவதாகவும், ஒராண்டுக்குள் கடனை திரும்பிச் செலுத்தினால் கூடுதல் வட்டி தள்ளுபடி சலுகை அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். டிஜிட்டல் பணபரிமாற்றம் மேற்கொண்டால், பணம் திரும்பி செலுத்தப்படும் சலுகை (கேஷ் பேக்) இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இதன் மூலம், மொத்த சேமிப்பு, மொத்த வட்டியைவிட அதிகமாக இருக்கும். கடந்த 3-4 ஆண்டுகளாக, நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.