Published : 09 Sep 2020 03:04 PM
Last Updated : 09 Sep 2020 03:04 PM

சுத்தமான எரிசக்தி திட்டத்தை நோக்கி இந்தியா: பியூஷ் கோயல் உறுதி

சுத்தமான எரிசக்தியை உருவாக்க வேண்டும் என்ற மனநிலையுடன், இந்தியா செயல்பட்டு கொண்டிருக்கிறது என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

சர்வதேச சூரியசக்தி கூட்டணி அமைப்பு ஏற்பாடு செய்த, முதல் உலக சூரிய சக்தி தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பேசிய பியூஷ் கோயல், தூய்மையான எரிசக்தி உருவாக்குவதில் இந்தியாவின் பங்கின் மூலம், துறைரீதியான அனைத்து குறைபாடுகளையும் அகற்றி, எதிர்கால தலைமுறையினருக்கு சுத்தமான எரிசக்தியை அளிக்க வேண்டும் என்ற கூட்டு மனநிலையில் இந்தியா செயல்பட்டு கொண்டிருக்கிறது’’ என்றார்.

சூரிய மின்சக்தி மற்றும் புதிய தொழில்நுட்பங்கள், உலகின் எதிர்கால தேவையான சக்தியை அளிக்கும், உலகை வாழ்வதற்கு தகுந்த மற்றும் சுத்தமான இடமாக மாற்றும் என பியூஷ் கோயல் கூறினார்.

‘‘சுத்தமான எரிசக்தியை உருவாக்குவதை தவிர வேறு வழியில்லை எனவும், இதை நாம் எதிர்காலத்தில் உருவாக்குவோம் எனவும், நமது குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க நாம் உறுதியுடன் செயல்பட வேண்டும்’’ எனவும் அவர் கூறினார்.

நாட்டில் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை கொண்டு வருவதில் பெட்ரோலியத்துறை மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டிய அமைச்சர் பியூஷ் கோயல், ‘‘இந்த திருப்புமுனை ஏற்படுத்தும் நடவடிக்கைகள், நாடு படிம எரிபொருளில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி மாறுவதற்கும் உதவும்’’ என்றார்.

உலகில் ஒரு நாள் மின்சாரம் மக்களுக்கு இலவசமாக கிடைக்கும் என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். ‘‘745 ஜிகா வாட் மின்சாரம், சூரிய சக்தியில் மட்டும் உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளதால், உலகின் இதர நாடுகளுக்கும் இந்தியாவால்

சூரிய மின்சக்தி வழங்க முடியும். உலகம் முழுவதும் ஒரே மின் தொகுப்பு நெட்வொர்க் ஏற்படுத்தப்பட்டு, நம்மால் மின்சாரம் வழங்க முடியும்’’ என தான் கற்பனை செய்து பார்ப்பதாகவும் அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். சூரியன், காற்று, தண்ணீர் ஆகியவை உலகம் முழுவதும் தனது சக்தியை அளித்துக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x