

கூடுதல் வரி வருமானம் வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. அதற்கு பலனாக கடந்த ஐந்து மாதத்தில் 36,500 கோடி ரூபாய் கூடுதல் தொகை மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. இதில் பெரும் பகுதி பெட்ரோல், டீசல் மூலமாக கிடைத்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீது கூடுதலாக கலால் வரி விதிக்கப்பட்டதால் மத்திய அரசுக்கு ரூ.30,000 கோடி வருமானம் அதிகமாக கிடைத் துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் இந்த தொகை கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஜனவரி 2015 வரை நான்கு முறை கலால் வரி உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக நடப்பு நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங் களில் கூடுதல் தொகை கிடைத் ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒரு டன் நிலக்கரிக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை கிளீன் எனர்ஜி செஸ் என்னும் வரி கடந்த மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 3,000 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கிடைத்திருக்கிறது.
ஆட்டோமொபைல் மற்றும் கன்ஸ்யூமர் குட்ஸ் துறைக்கு கொடுக்கப்பட்டு வந்த கலால் வரி சலுகை நீக்கப்பட்டதால் கடந்த ஐந்து மாதத்தில் 3,500 கோடி ரூபாய் கூடுதல் வரி வருமானம் கிடைத்துள்ளது.
கடந்த ஐந்து மாதங்களில் கலால் வரி வருமானம் 1.02 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடத்தின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது 69.7 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த நிதி ஆண்டில் இதே காலத்தில் 60,663 கோடி ரூபாய் மட்டுமே கலால் வரி வருமான இருந்தது.
மொத்த மறைமுக வரியில் கலால் வரியின் பங்கு 40 சதவீதமாகும். கடந்த ஐந்து மாதத்தில் மறைமுக வரி 2.63 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைவதை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டது. இந்த காலத்தில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.75 ரூபாய் அளவுக்கு அதிகரிக் கப்பட்டது.