

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
2012-ம் ஆண்டில் ஐசிஐசிஐ வங்கி வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் தீபக் கோச்சார் ஆதாயமடைந்தார் என்று வீடியோகான் மற்றும் ஐசிஐசிஐ பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளரான அர்விந்த் குப்தா குற்றம் சாட்டினார். ஆனால் அப்போது யாரும் கண்டுகொள்ளவில்லை. 2017-ல் வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடன் வாராக்கடனான பிறகுதான் ஊடகத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.
ஆரம்பத்திலிருந்தே இந்தக் குற்றச்சாட்டை வங்கியின் தலைவர் மகேந்திரகுமார் சர்மா மறுத்தார். சந்தா கோச்சார் மீது முழு நம்பிக்கை உள்ளது. அவர் தூய்மையானவர். வங்கி அவரை 100 சதவீதம் நம்புகிறது என்று சான்றிதழ் வழங்கினார். ஒரு கட்டத்தில் நிலைமை தீவிரமானதைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதி
பதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை குழுவை வங்கி நிர்வாகம் அமைத்தது. அப்போது, சந்தா கோச்சார் விடுமுறையில் அனுப்பப்பட்டார். விசாரணைக்குழுவின் அறிக்கை குறித்து எந்த அறிகுறியும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், சந்தா கோச்சார், தனது விடுமுறைக் காலம் முடிந்த பிறகு பணியில் சேராமல், அக்டோபர் மாதத்தில் பதவியை ராஜினாமா செய்தார். வங்கியும் இவரது ராஜினாமாவை ஏற்று, அவருக்குப் பதிலாக சந்தீப் பாக்ஷியை அப்பொறுப்பில் அமர்த்தியது.
கடந்த வாரம் நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் வங்கி விதிகளை மீறி சந்தா கோச்சார் நடந்து கொண்டது உறுதியானது. வீடியோகான் நிறுவனத்துடன் சேர்த்து மொத்தம் 6 நிறுவனங்களுக்கு விதிகளை மீறி கடன் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தணிக்கை முடிவுகளிலும் சந்தோ கோக்சார், தீபக் கோச்சார் தம்பதிகளுக்கு வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத்துடன் தொடர்பிருப்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்கும் பதிவானது.
தொடர்ந்து அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மும்பையில் சந்தா கோச்சார், வேணுகோபால் தூத் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். 5 இடங்களில் இந்த சோதனை நடந்தது. மேலும் அவுரங்காபாத் நகரில் உள்ள அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது பணமோசடி வழக்கிற்கு தேவையான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றியதாக தெரிகிறது.
ஊழல் மற்றும் பணமோசடி தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் பேரில் சந்தா கோச்சாரிடம் சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பணமோசடி வழக்கில் கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார்.