Published : 06 Sep 2020 07:29 AM
Last Updated : 06 Sep 2020 07:29 AM

சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் இந்தியாவில் ஆலை அமைத்தால் ஜப்பான் அரசு உதவி: அதிக நிறுவனங்கள் அமைய வாய்ப்பு

புதுடெல்லி

சீனாவில் இருந்து வெளியேறும் ஜப்பானிய நிறுவனங்களுக்கு மானிய உதவி அளிக்கப் போவதாக அந்நாட்டு வர்த்தக, பொருளாதாரத் துறை (எம்இடிஐ) அறிவித்துள்ளது. இதற்காக மானிய உதவி பெறும் ஆசிய நாடுகள் பட்டியலில் இந்தியா மற்றும் வங்கதேசத்தை சேர்த்துள்ளது.

இந்தியா - ஜப்பான் ஆகிய நாடுகள் இடையிலான மாநாடு தொடங்க இன்னும் ஒரு வார காலம் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டு வர்த்தகத் துறை இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மூன்று நாடுகளும் கூட்டுறவு, நம்பகத் தன்மை உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி பொருள் விநியோக சங்கிலியை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் இம்மாதம் 10-ம் தேதி கானொலி வாயிலாக மாநாட்டில் உரை நிகழ்த்த உள்ளனர். இரு நாடுகளிடையே கையகப்படுத்தல் மற்றும் இருதரப்பு சேவை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ராணுவம் சார்ந்த சேவை மற்றும் அது தொடர்பான பொருள் பகிர்வுகளை இரு நாடுகளும் மேற்கொள்ள வழி ஏற்படும். ஜப்பானிய பிரதமர் பொறுப்பில் இருந்து ஷின்சோ அபே பதவி விலகும் முன்பாக இரு நாடுகளிடையே முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானுடன் தற்போது மேற்கொள்ளும் ஒப்பந்தம் போலவே கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் போலவே சீனாவுடன் ஜப்பானுக்கும் உரசல் ஏற்பட்டுள்ளது. இம்மாதம் 10-ம் தேதி மாஸ்கோவில் நடைபெற உள்ள ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார். அந்த கூட்டத்தில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ-யை அவர் சந்திப்பார் என்று தெரிகிறது.

விநியோக சங்கிலி விரிதிறன் முன்னெடுப்பு (எஸ்சிஆர்ஐ) நடவடிக்கையானது பொருள் விநியோக தொடர்பில் மாற்று நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது. மூன்று நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் இடையிலான கூட்டம் புதன்கிழமை நடைபெற உள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தற்போது ஜப்பானிய அரசு சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள், இந்தியாவில் ஆலை அமைத்தால் அவற்றுக்கு மானிய உதவி அளிப்பதாக அறிவித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது என்று கோயல் குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்பத் துறை ஐடி - ஐடிஇஎஸ், செயற்கை நுண்ணறிவு, ஐஓடி உள்ளிட்ட தொழில்களில் உள்ள வாய்ப்புகளை ஆராய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல உணவு பதப்படுத்தல், ரசாயனம் சார்ந்த தொழில்களுக்கான வாய்ப்புகளும் ஆராயப்படுவதாக கோயல் தெரிவித்தார்.

இந்திய அரசு எத்தகைய வசதி, சலுகைளை அளிக்கிறது என்பதை எதிர்பார்த்து ஜப்பானிய நிறுவனங்கள் காத்திருப்பதாக டோக்கியோவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x