

நாடு முழுவதும் பொது சேவை மையங்களின் எண்ணிக்கையை ஒரு லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நேற்று உலக முதலீட்டாளர் மாநாட்டை ஒட்டி நடைபெற்ற உலக உற்பத்தி கேந்திரம், தகவல் தொழில்நுட்ப ஹார்ட்வேர் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் முதலீட்டு வாய்ப்புகள் - தமிழ்நாடு என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், தமிழக அரசின் தொழில்வணிகத்துறை ஆணையரும் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணைச் செயலாளருமான ராஜேந்திரகுமார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;
மத்திய அரசு அறிவித்துள்ள டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் தலையாய நோக்கம், தகவல் தொழில்நுட்ப அறிவுசார்ந்த இந்தியாவை உருவாக்குவதுதான். இதற்கு தகவல் தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படும். அனைத்து குடிமக்களுக்கும் தகவல் தொழில்நுட்ப வசதி, மின்ஆளுமை திட்டம் மூலம் தேவையான வசதிகளை பெறச்செய்வது, அதிவேகம் கொண்ட இணைய வசதி, மொபைல் பேங்கிங் வசதி, பொது சேவை மையங்களின் மூலம் வசதி பெறுவது, போன்றவை டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கங்களாக உள்ளது என்றார்.
தற்போது நாடு முழுவதும் ஊராட்சிகளில் செயல்படும் பொது சேவை மையங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள் தொடங்குவதற்கு மத்திய அரசு அதிக மானிய உதவி அளிக்கிறது. இத்துறையில் நாடு முழுவதும் ரூ.1 லட்சத்து 718 கோடி மதிப்புள்ள 77 புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.