Published : 04 Sep 2020 04:18 PM
Last Updated : 04 Sep 2020 04:18 PM

நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நேர்மறை போக்குடன் காணப்படுகிறது: பியூஷ் கோயல்

நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நேர்மறை போக்குடன் காணப்படுகிறது, கவலை கொள்ளத் தேவையில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

உலகளாவிய வர்த்தக நிலவரம், ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் பிரச்னை ஆகியவை குறித்து ஆலோசிப்பதற்காக ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் நிர்வாகிகளை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்துப் பேசினார்.

முடக்க காலத்திலிருந்தே இவர்களுடன் அமைச்சர் பியூஷ் கோயல் தொடர்ந்து பேசி வருகிறார். இந்தக் கூட்டத்தில் வர்த்தகத்துறை செயலாளர் டாக்டர் . அனுப் வதாவன் உட்பட மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவை நேர்மறையான போக்குடன் உள்ளது என்றார். கரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ஏற்றுமதியில் சிறிய தொய்வு ஏற்பட்டது என்றும், அதன்பின்பு ஏற்றுமதியில் முன்னேற்றம் ஏற்பட்டு கடந்த ஆண்டு அளவை நெருங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

இறக்குமதியை பொருத்தவரை, மூலதனப் பொருட்களின் ஏற்றுமதி குறையவில்லை என்றும், கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் உரங்கள் ஆகியவற்றில் மட்டும் இறக்குமதி குறைந்துள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை கடுமையாக குறைந்துள்ளது என்றும், சர்வதேச வர்த்தகம் மேம்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இதற்காக விநியோக நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்களின் விடா முயற்சி மற்றும் கடின உழைப்புக்கு அமைச்சர் நன்றி கூறினார்.

நம்பகத்தன்மையுடன் கூடிய சிறந்த வர்த்தகத் தகவல்களை உருவாக்க மத்திய அரசு முயற்சி வருவதாகவும், அதற்கேற்ப சிறந்த திட்டங்களையும், கொள்கைகளையும் உருவாக்க முடியும் என அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

24 புதிய உற்பத்தி துறைகள் அடையாளம் காணப்பட்டுள்தாகவும், இவற்றை விரிவு படுத்தி உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கை அதிகரிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார். உலக வர்த்தக அரங்கில், இந்தியா நம்பகத்தன்மை மிக்க நாடாக பார்க்கப்படுவதாகவும், அவர் குறிப்பிட்டார்.

ஏற்றுமதி பொருட்கள் இந்தியா திட்டத்தின் கீழ் பயன்பெறும் 98% ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.2 கோடி உச்சவரம்பு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். ஏற்றுமதியாளர்களுக்கான வரி குறைப்பை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தின் தங்களின் கருத்துக்கள், ஆலோசனைகளை தெரிவித்த ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் அதிகாரிகளுக்கு அமைச்சர் பியூஷ் கோயல் நன்றி தெரிவித்தார். இந்தியாவின் உற்பத்தியை மேம்படுத்த வழிகாட்டு குழு ஒன்றை அமைக்கும்படி ஏற்றுமதியாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x