இந்தியாவை உற்பத்தி மையமாக்க  திறமையான பணியாளர்கள் அவசியம்: நிதின் கட்கரி

இந்தியாவை உற்பத்தி மையமாக்க  திறமையான பணியாளர்கள் அவசியம்: நிதின் கட்கரி
Updated on
1 min read


இந்தியாவை உற்பத்தி மையமாக்குவதற்குத் திறமையான பணியாளர்கள் அவசியம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பிவாடியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தை மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி காணொளிக் காட்சி மூலம் இன்று துவக்கி வைத்தார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 22 முதல் 24 சதவீதம் வரை உற்பத்தித் துறை பங்களிப்பதாகக் கூறிய அவர், பிரதமரின் 'தற்சார்பு பாரதம்' அறைகூவலைத் தொடர்ந்து 15 புதிய தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே உள்ள 18 தொழில்நுட்ப மையங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், நமது நாட்டை உற்பத்தி மையம் ஆக்குவதற்குத் திறமையான பணியாளர்கள் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப மையங்கள் தாங்கள் அமைந்துள்ள பகுதியின் வினையூக்கியாகச் செயல்படலாம் என்று கூறிய திரு. கட்கரி, தொழில்நுட்ப மையங்களுக்குக் கடன்களை வழங்க நாங்கள் யோசித்து வருகிறோம் என்றும், அதைக் கொண்டு உள்ளூர் தொழிற்சாலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய இயந்திரங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை அவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இந்தத் தொழில்நுட்ப மையங்களுக்கான விரிவாக்க மையங்கள் மீதான பணிகளும் நடந்து வருகின்றன. விரிவாக்க மையங்களுக்கு நிலமும் இதர போக்குவரத்து வசதிகளையும் வழங்குமாறு மாநில அரசுகளை அவர் கேட்டுக்கொண்டார்.

இத்தகைய விரிவாக்க மையங்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள புதிய மற்றும் ஏற்கெனவே இயங்கும் தொழிற்சாலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். இளைஞர்களுக்குத் திறன்பயிற்சிகளை அளிப்பதற்கு ஏற்கனவே இருக்கும் பல்நோக்குத் தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழில் பயிற்சி நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றின் உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தொழிற்சாலைகளின் ஆதரவையும் கோரலாம் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in