

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோ ஃபைபர் மாதத்துக்கு ரூ.399 கட்டணத்தில் அளவில்லா பிராட்பேண்ட் இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் திட்டத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது.
இந்தப் புதிய திட்டப்படி ரூ.1499 மாதப் பிளானைத் தேர்வு செய்தால் நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட 12 செயலிகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டங்கள் அனைத்தும் செப்டம்பர் 1-ம் தேதி (நாளை) முதல் நடைமுறைக்கு வருகின்றன
இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஆகாஷ் அம்பானி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
''ஜியோ ஃபைபரை ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்ல விரும்புகிறோம். குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பயன் பெற வேண்டும்.
இந்தியாவின் மிகப்பெரிய, வேகமாக வளர்ந்துவரும் ஜியோ நிறுவனம், உலக அளவில் பிராண்ட் இணைப்பில் முன்னணியில் இருக்கிறது. ஏறக்குறைய 1,600 நகரங்களில் பிராட்பேண்ட் வசதியை வழங்குகிறது.
மிகக்குறைந்த அளவிலான மாதத்துக்கு ரூ.399 கட்டணத்தில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் அப்லோடு, டவுன்லோடு வேகம் வினாடிக்கு 30 மெகாபிட் (எம்பிபிஎஸ்) இருக்கும். வீடுகளுக்குத் தேவையான ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்புத் திட்டத்தில் அளவில்லா இன்டர்நெட்டைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
150 எம்பிபிஎஸ் திட்டத்தைத் தேர்வு செய்தால், 30 நாட்களுக்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் 10 முக்கியச் செயலிகளும் கிடைக்கும்.
இது தவிர ரூ.999க்கு மாத இண்டர்நெட் திட்டத்தில் 11 ஓடிடி செயலிகளான அமேசான், பிரைம் வீடியோ, டிஸ்னி ஹாட் ஸ்டார், ஜீ5, சோனி லைவ் உள்ளிட்டவை கிடைக்கும். ரூ.1,499க்கு இருக்கும் திட்டத்தைத் தேர்வு செய்தால் நெட்ஃப்ளிக்ஸ் இணைப்புடன் 12 ஓடிடி செயலிகள் இலவசமாகக் கிடைக்கும்.
இந்த 12 செயலிகளுக்கும் கட்டணம் தேவையில்லை. ஏற்கெனவே ஜியோ ஃபைபர் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் புதிய திட்டத்தின்படி தங்கள் திட்டத்தை மாற்றிக்கொள்ள முடியும்''.
இவ்வாறு ஜியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.