

வங்கித் துறை உயர் அதிகாரிகளுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செப். 3-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். இதில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (என்பிஎப்சி) தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் பெரும் நிதி நெருக் கடிக்கு உள்ளாகியுள்ளனர். கடன் மறு சீரமைப்பு குறித்து வங்கித் துறை அதிகாரிகளுடன் நிதி அமைச்சர் ஆலோசனை நடத்தி அவர்களது கருத்துகளை கேட்டறிவார் எனத் தெரிகிறது.
வங்கிக் கடன் சீரமைப்பு குறித்தும் அதற்கு எடுக்க வேண்டிய தேவையான நடவடிக்கை குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். கடன் மறு சீரமைப்பு குறித்து ஆராய வங்கியாளர் கே.வி.காமத் தலைமையில் ஒரு குழுவை ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது. இக்குழுவினர் விரைவில் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர். அதற்கு முன்பாக வங்கியாளர்களுடனான ஆலோசனை நடைபெறுவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
தொழில் துறை நிறுவனங்களின் கடன் சுமை குறித்தும் அவற்றை மறு சீரமைப்பு செய்வது குறித்தும் கே.வி.காமத் பரிந் துரையை செப்டம்பர் 6-ம் தேதிக்குள் இறுதி செய்யப் போவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
கடந்த வாரம் பஞ்சாப் நேஷனல் வங்கி 5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரையிலான கடன் பொறுப்புகளை ஒரு முறை மறுசீரமைப்பு செய்வது சரியாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இறுதி முடிவு செப்டம்பர் மாதத்துக்குள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதனிடையே கே.வி.காமத் குழு தொழில் நிறுவனங்களின் கடன் மறு சீரமைப்பு குறித்து மட்டும் பரிந்துரை அளிக்க உள்ளது. தனி நபர், சில்லரை, வர்த்தகக் கடன் பொறுப்புகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள வட்டி, தவணைக்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், இதை எவ்விதம் எதிர் கொள்வது என்ற பிரச்சினையும் வங்கியாளர்களுக்கு எழுந் துள்ளது. தனி நபர்களும் அதிக அளவில் கடனுக்கு விண் ணப்பிக்கலாம் என வங்கியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.