மத்திய அரசின் 6-ம் கட்ட தங்க சேமிப்புப் பத்திர வெளியீடு திங்கள் முதல் தொடக்கம்

மத்திய அரசின் 6-ம் கட்ட தங்க சேமிப்புப் பத்திர வெளியீடு திங்கள் முதல் தொடக்கம்
Updated on
1 min read

மத்திய அரசின் நடப்பு நிதியாண்டுக்கான தங்கப்பத்திர வெளியீடு நாளை (திங்கள், 31, ஆக.) முதல் தொடங்குகிறது.

இந்த 6-ம் கட்ட வெளியீட்டில் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,117 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த 6ம் கட்ட தங்கப்பத்திர வெளியீடு திங்கள் முதல் தொடங்கி செப்டம்பர் 4ம் தேதியுடன் முடிவடைகிறது. 5ம் கட்ட தங்கப்பத்திர வெளியீட்டின் போது தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,334 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பத்திர வெளியீட்டுக்கு முதல் 3 வர்த்தக தினங்களில் இருந்த 999 சுத்தத் தங்கத்தின் விலை சராசரியைக் கொண்டு வெளியீடு விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில்தான் நாளை வெளியாகும் தங்கப்பத்திரத்தின் விலை ரூ.5,117 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வலைத்தளம் அல்லது மின்னணு மூலம் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு கிராம் ஒன்றிற்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் கிரெடிட், டெபிட் கார்டு உள்ளிட்ட மின்னணு பரிவர்த்தனை மூலம் தங்கப்பத்திரம் வாங்குவோருக்கு கிராம் ஒன்றுக்கு ரூ.5,067 என்ற விலைக்கு சேமிப்புப்பத்திரம் கிடைக்கும்.

வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில் தங்க சேமிப்புப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

தங்கத்தை ஆவண வடிவில் சேமிக்கும் திட்டமான இதில் ஒரு கிராம் தங்கம் ஒரு யூனிட் எனப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in