

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடு தொகையை மத்திய அரசு நிச்சயம் அளிக்கும் என்று மாநில அரசுகளுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக சரக்கு மற்றும் சேவை வரி வசூல் வெகுவாகக் குறைந்துள்ளது. இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசு வழங்க வேண்டிய இழப்பீட்டுக்கு இரண்டு விதமான வாய்ப்புகளை மாநில அரசுகளுக்கு அளிப்பதாகத் தெரிவித்திருந்தார். கரோனா பரவல் கடவுளின் செயல் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக மத்திய நிதி மற்றும் செலவுத் துறை செயலர், மாநில அரசுகளுடன் செப்டம்பர் 1-ம் தேதி ஆன்லைன் மூலம் கலந்தாலோசிக்க உள்ளார். அதில் மத்திய அரசு அளித்துள்ள 2 சலுகைகள் குறித்து மாநிலங்களுக்கு எழும் சந்தேகங்களை போக்குவார்.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘மறைந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு ஜிஎஸ்டி முறையை கொண்டு வந்தார். அதன்படி மாநிலங்களுக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு உரிய காலம் வரை அளிக்கும். அதை எப்பாடுபட்டாவது அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி மத்திய அரசு இழப்பீட்டை அளிக்கும்’’ என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்துக்கு இந்த ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹரியாணா மாநிலமும் இதேபோல தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ள நிலையில் நேரடி வரி வருவாயும் குறைந்துள்ளது. இதற்கு மக்களின் சம்பளம் குறைந்ததும் முக்கியக் காரணமாகும். இறக்குமதி சரிந்ததால் சுங்க வரி வருமானமும் குறைந்துள்ளது. இது நாடு முழுவதுக்குமான பிரச்சினை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.