

இ-காமர்ஸ் நிறுவனங்கள் தாங்கள்டெலிவரி செய்யும் பொருட்கள் எந்த நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டவை என்ற விவரங்களை செப்டம்பர் 30-க்குள் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய தொழில் துறை
அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிதாக டெலிவரி செய்யும் பொருட்கள் மட்டுமின்றி ஏற்கெனவே இருப்பில் உள்ள பொருட்களுக்கும் இத்தகைய விவரங்கள் அடங்கிய அட்டை நிச்சயம் இடம்பெற வேண்டும் என்று தொழில் மேம்பாடு மற்றும் வர்த்தகம் (டிபிஐஐடி) துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்தில் ஆன்லைன் நிறுவனங்களுடன் நடந்த கூட்டத்தில்இது தொடர்பாக விவாதிக்கப் பட்டது. எனினும் இதுதொடர்பாக எழுத்துப்பூர்வ உத்தரவு எதுவும் இதுவரை நிறுவனங்களுக்கு அனுப்பப்படவில்லை என்று டிபிஐஐடி துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 30-ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தாலும், புதிதாக வரும் பொருட் களுக்கு அவை பெறப்படும் நாடுகள் குறித்த விவரங்களை சேர்க்க முடியும். ஆனால், கையிருப்பில் உள்ள பொருட்களுக்கு இந்த விவரங்களை சேர்ப்பது கடினமாக இருக்கும் என்று ஆன்லைன் வர்த்தக நிறுவன பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய நடைமுறையை செயல்படுத்த குறைந்தது 6 மாத காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தொழில் கூட்டமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. கரோனா ஊரடங்குகாலத்தில் இதை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினமான விஷயம் என தெரிவித்துள்ளன.
பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் பலரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள்தான் பொருட்களை தருவிக்கும் விவரங்களை பட்டியலில் சேர்க்க முடியும் என்றும் இத்துறை பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற விவரங்களை சேர்ப்பதில் விற்பனையாளர்களின் பங்கு 90 சதவீத அளவுக்கு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்துஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் அவை பெறப்படும் நாடுகள் குறித்த விவரங்களை விற்பனை விவர பட்டியலில் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஆன்லைன் வர்த்தகநிறுவனங்கள் இது நடைமுறையில் சாத்தியமில்லை என கூறியதைத் தொடர்ந்து கால அவகாசம் செப்டம்பர் வரை அளிக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
உதாரணத்துக்கு சீன தயாரிப்பான செல்போன், வியட்நாம் வழியாக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டாலும் அது சீன தயாரிப்பாகத்தான் கருதப்படும். ஒரு குறிப்பிட்ட பொருளில் பல நாடுகளின் தயாரிப்புகள் இடம்பெற்றிருந்தாலும் அது தயாரிக்கப்படும் நாட்டின் பெயர்தான் இடம்பெறவேண்டும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.