Published : 25 Aug 2020 07:14 PM
Last Updated : 25 Aug 2020 07:14 PM

வந்தேபாரத் இயக்கம்; 11.7 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட 11.7 லட்சம் இந்தியர்களை வந்தேபாரத் இயக்கம் மூலம் தாய்நாட்டுக்குத் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் நிறைய இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கித்தவித்தனர்.

பெருந்தொற்றுக் காலத்தில் குடும்பத்துடன் தாய்நாட்டில் இருக்க பலரும், குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்தவர்கள், விரும்பியதால் அவர்கள் கவலைக்குள்ளானார்கள். பல தொழிலாளர்கள் வேலைகளையும் இழந்ததால், அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்ப வந்தேபாரத் இயக்கம் உதவியது.

வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வரவும், இந்தியாவில் சிக்கித்தவிக்கும் இதர நாட்டினரை அவர்களது நாடுகளுக்கு அனுப்பவும் வந்தேபாரத் இயக்கம் மத்திய அரசால் மே 7 அன்று தொடங்கப்பட்டது. வந்தேபாரத் இயக்கத்தின் ஆறாவது கட்டம் செப்டம்பர் 1 அன்று தொடங்கி அக்டோபர் 24 வரை தொடரும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருந்தார்.

ஆகஸ்டு 1 அன்று தொடங்கிய ஐந்தாவது கட்டம் ஆகஸ்டு 31 அன்று முடிவடையும். ஷார்ஜா, அபுதாபி, துபாய், பாங்காக், கொழும்பு, தரேஸ் சலாம் மற்றும் ரியாத் போன்ற இடங்களில் இருந்து 766-க்கும் அதிகமான விமானங்கள் இந்திய நகரங்களுக்குத் திட்டமிடப்பட்டிருக்கின்றன.

வந்தேபாரத் இயக்கத்தின் கீழ், கோவிட்-19 பெருந்தொற்று காரணத்தால் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவித்த 11.70 லட்சம் இந்தியர்கள் இந்த வருடம் மே 6-இல் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். அதே போல், இந்தியாவில் சிக்கித் தவித்த 1.66 லட்சம் இதர நாட்டினர் அவர்களது நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திங்களன்று திருச்சியில் இருந்து துபாய்க்கு 158 பயணிகளை வந்தேபாரத் இயக்கத்தின் கீழ் அழைத்துச் சென்றது.

முதல் கட்ட வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் மே 7-ஆம் தேதி தொடங்கி மே 17ஆம் தேதி வரை 84 விமானங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், பிலிப்பின்ஸ், சவுதி அரேபியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு இயக்கப்பட்டன.மே 16-ஆம் தேதி தொடங்கிய இரண்டாம் கட்ட வந்தே பாரத் இயக்கப் பணி ஜூன் 13-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது.

ஜூன் 10 முதல் ஜூன் 22 வரையிலான மூன்றாம் கட்டப் பணியில் 130 விமானங்கள் இயக்கப்பட்டன. அதில் சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். ஜூலை 1ஆம் தேதி நான்காம் கட்டப்பணி தொடங்கியது.

வந்தே பாரத்தின் ஆறாவது கட்டத்தின் கீழ், செப்டம்பர் 2 மற்றும் 3 அன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரசால் விமானங்கள் இயக்கப்படும். இந்த நாட்களில், சிங்கப்பூரில் இருந்து மாலை 7 மணிக்கு கிளம்பும் இந்த விமானம், திருச்சிராப்பள்ளியை இரவு 8.45 மணிக்கு வந்தடையும். திருச்சிராப்பள்ளியைத் தவிர, சென்னை, மதுரை, ஹைதரபாத், விஜயவாடா, பெங்களூரு, கொச்சி ஆகிய நகரங்களுக்கும் சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வந்தே பாரத்தின் கீழ் இயக்குகிறது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x