Published : 25 Aug 2020 06:46 AM
Last Updated : 25 Aug 2020 06:46 AM

சரக்கு மற்றும் சேவை வரி குறைப்பால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு

புதுடெல்லி

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் முதலாண்டு நினைவு நாளை முன்னிட்டு நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

ஜிஎஸ்டி முறை அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, ஒருங்கிணைந்த மதிப்பு கூட்டு வரி (வாட்), உற்பத்தி வரி, விற்பனை வரி உள்ளிட்ட பல்வேறு வரி விதிப்புகளால் ஒரு பொருளுக்கு செலுத்தும் வரி 31 சதவீத அளவுக்கு இருந்தது. தற்போது ஜிஎஸ்டி முறை பரவலாக அனைத்து தரப்பினராலும் ஏற்கப்பட்டு வரி செலுத்துவது எளிமையான முறையாக உள்ளது. ஜிஎஸ்டி முறைக்கு முந்தைய வரி செலுத்தும் காலத்தில் வரி ஏய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது வரி குறைவாக இருப்பதால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஜிஎஸ்டி முறையானது நுகர்வோர் மற்றும் வரி செலுத்துவோருக்கு எளிமையான முறையாக உள்ளது. முன்பு வரி செலுத்துவோர் எண்ணிக்கை 65 லட்சமாகும். தற்போது இது 1.24 கோடியாக உயர்ந்துள்ளது. 17 விதமான வரிகளை உள்ளடக்கியதாக ஜிஎஸ்டி உருவாக்கப்பட்டு 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. நரேந்திர மோடி அமைச்சரவை 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றதில் இருந்து மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி தீவிரமாக முயற்சித்து இதை அமல்படுத்தினார்.

அருண் ஜேட்லியை நினைவுகூரும் இந்த நாளில், ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு அவர் ஆற்றிய சீரிய பணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் வரி விதிப்பு முறையில் அடிப்படையிலேயே பெரும் மாற்றத்துக்கு காரணமாக இருந்தவர் ஜேட்லி.

இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான வரி விதிக்கப்பட்டது. இதில் மிகப் பெரும் முறைகேடுகளும், சீரான நிலையும் இல்லாத சூழல் நிலவியது. ஆனால் அந்த முறையை முற்றிலுமாக மாற்றிய ஜிஎஸ்டி நடைமுறை, மக்களாக முன்வந்து வரி செலுத்துவதற்கு வழி ஏற்படுத்தியது.

ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வருமானம் ஈட்டும் தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் இந்த வரம்பானது ரூ.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு பெரும்பாலான பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இம்முறையில் அதிக வரி வரம்பான 28 சதவீத வரியானது புகையிலை, மது உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ஆடம்பர பொருட்கள் மீது மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. 28 சதவீத வரி வரம்பில் இடம்பெற்றிருந்த 230 பொருட்களில் 200 பொருட்கள் குறைவான வரி விதிப்பு வரம்புக்கு மாற்றப்பட்டுள்ளது.

வீட்டு வசதி பிரிவானது 5 சதவீத வரி விதிப்பு பிரிவில் வந்துள்ளது. குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீடுகளுக்கான வரி 1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x