Last Updated : 17 Sep, 2015 12:39 PM

 

Published : 17 Sep 2015 12:39 PM
Last Updated : 17 Sep 2015 12:39 PM

5 ஆண்டுகளில் 15 புதிய மாடல் கார்கள்: மாருதி சுஸுகி திட்டம்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 15 புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் துணை நிறுவனமான மாருதி சுஸுகி நிர்ணயித்துள்ள ஆண்டுக்கு 20 லட்சம் கார்களை விற்கும் இலக்கை எட்ட முடியும் என நம்புகிறது.

சுஸுகி நிறுவனத்தின் இந்திய பிரிவான மாருதி சுஸுகி தங் களது குழுமத்தில் மிக முக்கிய பங்களிப்பை ஏற்படுத்தி வருவதாக அதன் தலைவர் டி சுஸுகி தெரிவித்தார்.

சுஸுகி குழுமம் அடுத்த 5 ஆண்டுகளில் 20 புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் சிறிய ரகக் காரான கெய் ஜிதோஷா எனும் மாடல் தவிர மற்றவை அனைத்தும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார். இந்தியாவிலிருந்து பிராங்பர்டில் நடைபெறும் ஆட்டோமொபைல் கண்காட்சி நிகழ்ச்சிகளை அளிக்க வந்துள்ள இந்திய செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார். இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 15 புதிய மாடல் கார்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகக் கூறினார்.

வாடிக்கையாளர்களின் எதிர் பார்ப்பு மற்றும் தேவைகளுக்கு ஏற்ப கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் கூறினார்.

2025-ம் ஆண்டில் உலகிலேயே அதிக கார்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழும் என்று அவர் குறிப்பிட்டார். இத்தகைய வாய்ப்பை சாதகமாக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை சுஸுகி நிறுவனம் எடுத்து வருவதாகக் கூறினார்.

அடுத்த 100 ஆண்டுகளுக்கான சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் செயல்பாடுகளில் மாருதி சுஸுகி நிறுவனம் மிக முக்கிய பங்காற்றும் என்று குறிப்பிட்டார்.

சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷ னின் மொத்த விற்பனையில் மாருதி சுஸுகியின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 60 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

இந்தியாவில் கார் உபயோகம் முழு அளவு பயன்படுத்தப்படவில்லை. இது தவிர புதிய நாடுகளையும் சுஸுகி ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார். ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கார் விற்பனையை அதிகரிப்பது தொடர்பாக உத்திகள் வகுத்து வருவதாகவும் கூறினார்.

ஜப்பானில் சிறிய ரகக் கார்களுக்கு வரி விதிப்பு போடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் உள்நாட்டில் சுஸுகியின் எதிர்காலம் எப்படியிருக்கிறது என்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, உள்நாட்டில் விற்பனை சந்தையை அதிகரிப்பதற்கு இதுபிரச்சினையாக உள்ளது என்பதை ஒப்புக் கொண்ட அவர், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகம் விற்பனையாவதாகவும், இதில் காணப்படும் சில நிழலான சிக்கல்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

மாருதி சுஸுகி நிறுவனத்தில் சுஸுகி நிறுவனத்துக்கு தற்போது உள்ள 56.21 சதவீத பங்குகளை மேலும் அதிகரிப்பது தொடர்பான யோசனை ஏதும் நிறுவனத்தின் பரிசீலனையில் இல்லவே இல்லை என்று யூகங்களை உறுதியாக மறுத்தார்.

அதேசமயம் இந்தியாவில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனம் சர்வதேச அளவில் தயாரிப்புகளை உருவாக்கும் அளவுக்கு முன்னேற வேண்டும் என்று சுட்டிக் காட்டினார்.

இப்போது மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தைக்கு ஏற்ற வாகனங்களை தயாரிப்பதில் முன்னேறியுள்ளது. அதேபோல சர்வதேச தேவைகளுக்கு ஏற்ப வாகனங்களை தயாரிக்கும் நிலைக்கு உயர வேண்டும் என்று அவர் கூறினார்.

சர்வதேச அளவில் வாகன உற்பத்தியை அதிகரிக்க புதிய நிறுவனத்தை சுஸுகி தேடுகிறதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இப்போதுதான் ஃபோக்ஸ்வேகனுடனான உறவு முறிந்துள்ளது. உடனடியாக மாற்று நிறுவனத்தைத் தேடும் நிலையில் நாங்கள் இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x