Published : 13 Aug 2020 03:56 PM
Last Updated : 13 Aug 2020 03:56 PM

தனியார் ரயில் திட்டம்; 2-வது ஆலோசனைக் கூட்டத்தில் 23 விண்ணப்பதாரர்கள் பங்கேற்பு

தனியார் ரயில் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 23 பேர் பங்கேற்றனர்.

பயணிகள் ரயில் இயக்கத்தில் தனியார் பங்கேற்புத் திட்டம், தரமான சேவை, பயண நேரம் குறைப்பு, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தேவை மற்றும் விநியோக இடைவெளியைக் குறைக்கும் என்பதால், பயணிகளின் அனுபவத்தில் முன்மாதிரி மாற்றத்தைக் கொண்டு வரும். இத்திட்டம், பொதுமக்களின் போக்குவரத்து சேவைகளை உயர்த்தும். இந்த ரயில்கள், ஏற்கனவே ரயில்வே இயக்கி வரும் ரயில்களுடன் கூடுதலாக இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தனியார் ரயில்கள் அறிமுகப்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பில் வளர்ச்சி ஏற்படும்.

இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ள தனியார் நிறுவனங்கள், இரண்டு கட்ட ஏலப் போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த போட்டி முறை, தகுதி வேண்டுகோள் (ஆர்எப்கியூ), கருத்துரு வேண்டுகோள் (ஆர்எப்பி) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

இதற்கான விண்ணப்பத்துக்கு முந்தைய முதலாவது கூட்டம் ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு முன்பாக, ஒரு திட்டத்துக்கு மேற்பட்ட ஏலத்தில் பங்கேற்பவர்களுக்கான கட்டணத்தில் பத்தில் ஒரு பகுதியை ரயில்வே அமைச்சகம் குறைத்தது. மேலும், 3 திட்டங்கள் என்ற கட்டுப்பாட்டையும் தளர்த்தியது. ரயில்களைக் குத்தகைக்கு விடுவதும் அனுமதிக்கப்பட்டது. ரயில் போக்குவரத்துத் தரவு, சலுகை ஒப்பந்த வரைவு, வரைவு சாத்தியக்கூறு அறிக்கை, தரத்துக்கான வரைவுக் கையேடு, ரயில்களின் விவரக்குறிப்புகள் போன்றவற்றை ரயில்வே அமைச்சகம் பகிர்ந்து கொண்டுள்ளது.

ஏல நடைமுறைகளின் ஒரு பகுதியாக, ரயில்வே அமைச்சகம், விண்ணப்பத்துக்கு முந்தைய இரண்டாவது கூட்டத்தை நேற்று நடத்தியது. பல்வேறு தரப்பைச் சேர்ந்த 23 உத்தேச விண்ணப்பதாரர்கள் இதில் கலந்து கொண்டதன் மூலம், இத்திட்டத்திற்கு பெரும் வரவேற்பு காணப்பட்டது.

திட்டத்திற்கு உரிய ஆவணங்களை வெளிப்படையான முறையில் பகிர்ந்து கொள்ளும், ரயில்வே அமைச்சகத்தின் முடிவை விண்ணப்பதாரர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

தகுதி வேண்டுகோள் விதிமுறைகள், திட்டத்தின் வரையறைகள் குறித்த விவாதத்துடன் மாநாடு தொடங்கியது. அதன் பின்னர் விண்ணப்பதாரர்கள் எழுப்பிய கேள்விகள் பற்றி விரிவான விவாதம் நடைபெற்றது. தகுதி வேண்டுகோள், ஏல நடைமுறைகள் குறித்து ரயில்வே அமைச்சகம், நிதிஆயோக் ஆகியவற்றின் அதிகாரிகள் தெளிவான விளக்கங்களை அளித்தனர்.

விண்ணப்பதாரர்கள் எழுப்பிய, ஏராளமான விஷயங்கள் பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், தகுதி வேண்டுகோளைத் தாக்கல் செய்வதற்கு, அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x