69 சிறிய எண்ணெய், எரிவாயு வயல்கள் ஏலம்: மத்திய அரசு முடிவு

69 சிறிய எண்ணெய், எரிவாயு வயல்கள் ஏலம்: மத்திய அரசு முடிவு

Published on

மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீரமைப்பு நடவடிக்கைகளில் அடுத்த கட்டமாக சிறிய அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் ஏலம் விட உள்ளது. வருவாய் பகிர்வு அடிப்படையில் 69 வயல்கள் இந்த வகையில் ஏலம் விட மத்திய அமைச்சரவை நேற்று முடிவுசெய்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் இந்த ஏலம் நடைபெற உள்ளது.

இந்த வயல்கள் ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா நிறுவனங்கள் சரண்டர் செய்தவை. தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நேற்று இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. வளர்ச்சி இல்லாத, செலவு அதிகரிக்கும் இவற்றை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

வருவாய் பகிர்வு அடிப்படையில் இந்த ஏலம் விடப்படும். அல்லது எண்ணெய் மற்றும் எரிவாய் நிறுவனங்களின் முன்னுரிமை அடிப்படையில் ஏலம் விட அரசு திட்டம் தயாரித்து வருகிறது.

நிறுவனங்களின் அதிகபட்ச வருவாய் பகிர்வை பொறுத்து திட்டம் வடிவமைக்கப்படும். எண்ணெய் துறையில் தற்போதுதான் முதல் முறையாக வருவாய் பகிர்வு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஏலத்தில் வெற்றி பெறுபவர்கள் இந்த வயல்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுத்து சந்தை விலைக்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். இதில் அரசின் தலையீடுகள் இருக்காது. மேலும் ஒதுக்கீடுகள் குறித்த கட்டுப்பாடுகள் இருக்காது.

இந்த ஏலத்தின் 80:20 என்கிற அடிப்படையில் வருவாய் பகிர்வு இருக்கும்.

1999-ம் ஆண்டு முதல் இதுவரை 9 சுற்றுகளில் 254 எண்ணெய் வயல்களுக்கு ஏலம் விடப்பட்டிருக்கின்றன. ஓஎன்ஜிசி 63 இடங்களை, செலவு அதிகரிப்பு மற்றும் சிக்கனமில்லாத இடங்களாக அடையாளம் கண்டு அரசிடம் திரும்ப அளித்துள்ளது. ஆயில் இந்தியா நிறுவனம் இது போன்ற 6 இடங்களை அரசிடம் திரும்ப அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த எண்ணெய் வயல் ஏலத்தில் நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்வதற்கான அனுமதியும் வழங்கப்படும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in