Published : 31 Jul 2020 03:58 PM
Last Updated : 31 Jul 2020 03:58 PM

வேளாண் சார்ந்த 112 புதிய தொழில் தொடங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி

விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கும், வேளாண் துறையில் புதிதாகத் தொழில் தொடங்குபவர்களை மத்திய அரசு ஊக்குவித்து வருவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.

ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதுமைகள், வேளாண் தொழில் முனைவோர் குறித்த திட்டங்களும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.

2020- 2021 ஆம் ஆண்டில் முதல் கட்டமாக வேளாண் பதப்படுத்துதல், உணவுத் தொழில்நுட்பம், மதிப்புக் கூட்டுதல் ஆகிய துறைகளில், 112 புதிய ஸ்டார்ட்அப் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படும். அதற்காக நிதி உதவி வழங்கப்படும். இதனால் விவசாயிகளின் வருவாய் பெருகும். இந்த நிதி தவணை முறையில் வழங்கப்படும்.

முன்னதாக இம்மாதம், நாட்டில் ஆய்வு, விரிவாக்கம், கல்வி ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து பரிசீலனை செய்யப்பட்ட போது, பிரதமர் நரேந்திர மோடி வேளாண் துறையிலும், வேளாண் சார் துறைகளிலும் தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுவதையும், புதுமைகள் அறிமுகப்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்தும் வகையில், புதிதாகத் தொழில்
தொடங்குபவர்களுக்கும், வேளாண் தொழில் முனைவோர்களுக்கும் ஊக்கம் அளிக்கப்படவேண்டும் என்று கூறினார்.

இதுபற்றி மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில் ‘‘வேளாண் துறைக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளது போல, வேளாண் மற்றும் வேளாண் சார் தொழில் பிரிவுகளில், புதிதாகத் தொழில் தொடங்குபவர்களையும், வேளாண் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.’’ என்றார்.

விவசாயிகளுக்கு தேவைப்படும் போதெல்லாம், அவர்களுக்குத் தேவையான தகவல்களை அளிக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பம் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இளைஞர்கள், விவசாயப் பட்டப்படிப்பு படித்த பட்டதாரிகள் ஆகியோரின் திறனும், தொழில்நுட்பமும், இந்திய சமுதாயத்தின் பாரம்பரிய அறிவுடன் இணைந்து செயல்பட்டு , இந்திய வேளாண் துறையின் முழுத்திறன் கண்டறியப்பட்டு கிராமப்புறங்களில் பெருமளவிலான மாற்றம் நிகழ வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். வேளாண் துறை செயல்பாடுகளில் சோர்வடையச் செய்யும் செயல்களைக் குறைக்கும் வகையில் புதிய கருவிகளை வடிவமைப்பது, செயல்பாடுகளுக்கான இதர பொருள்களுக்குத் தேவையான வடிவ மாற்றங்களைச் செய்வது ஆகியவற்றுக்காகவும், ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும் ஆண்டுக்கு இருமுறை கணிப்பொறி தொழில்நுட்ப நீள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாம் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

வேளாண்துறை போட்டியிடும் திறன் கொண்டதாக மாற்றப்பட வேண்டியது அவசியம் என்றும், வேளாண் அடிப்படையிலான செயல்பாடுகளுக்குக் கரம் பிடித்து உதவி செய்யப்பட வேண்டும் என்றும், விரைவில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x