Published : 30 Jul 2020 09:20 PM
Last Updated : 30 Jul 2020 09:20 PM

கரோனா தொற்று; நிலக்கரி நிறுவன ஊழியர் உயிரிழந்தால் பணியின் போது ஏற்படும் மரணத்திற்குரிய நிதிப்பலன்கள்: மத்திய அரசு அறிவிப்பு

இந்திய நிலக்கரி நிறுவனத்தின் ஊழியர்கள் கோவிட்-19 காரணமாக உயிரிழந்தால் அவர்களது மரணம் விபத்து மரணமாக கருதப்பட்டு அதற்குரிய நிதிபலன்கள் வழங்கப்படும் என மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.

பணியின் போது விபத்தில் உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிதிப்பலன்கள், இந்த இறப்பிலும் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு நாள் பயணமாக ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சென்ற ஜோஷி, ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்திய நிலக்கரி நிறுவனத்தில் (கோல் இந்தியா) சுமார் 4 லட்சம் ஊழியர்கள் இருப்பதாகவும், இந்த முடிவால், ஒப்பந்தத் தொழிலாளர்களும் பலனடைவார்கள் என்றும் கூறினார். கோவிட் காரணமாக இதுவரை உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினரும் பாதுகாக்கப்படுவார்கள்.

''கோவிட் தொற்று காலத்தில், நிலக்கரி நிறுவனப் பணியாளர்கள் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதையும் பொருட்படுத்தாமல் மகத்தான பணியைச் செய்துள்ளனர். அவர்கள் இடையறாது சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதனால்தான், நான் அவர்களை நிலக்கரி வீரர்கள் என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறேன். நாட்டுக்கு அவர்கள் ஆற்றி வரும் மதிப்புமிக்க சேவையை அங்கீகரிக்கும் வகையில் நான் இதை அறிவித்துள்ளேன்'' என்று ஜோஷி கூறினார்.

வணிக ரீதியிலான நிலக்கரி சுரங்கப் பணிகள், வரும் ஆண்டுகளில் ஜார்க்கண்டின் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாக அமையும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஜார்க்கண்டில் 9 நிலக்கரி சுரங்கங்கள் வணிக ஏலத்தின் மூலம் , முதலாண்டில் மாநிலம் ரூ.3200 கோடி வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாநிலத்தின் சுமார் 50,000 பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். கூடுதலாக , மாவட்டக் கனிம அறக்கட்டளைக்கு
ஜார்க்கண்டின் பங்களிப்பு சுமார் ரூ. 17 கோடியாக இருக்கும். இது நிலக்கரி வயல்களைச் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x