Published : 29 Jul 2020 07:31 AM
Last Updated : 29 Jul 2020 07:31 AM

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது ஏன்?

இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணமே முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என கருதுவதுதான்.

இதுதொடர்பாக உலக தங்க கவுன்சில் மேலாண் இயக்குநர் (இந்தியா) பிஆர்.சோமசுந்தரம் கூறியதாவது:

தங்கத்தின் விலை முதல் முறையாக ரூ.50 ஆயிரம் என்ற நிலையை எட்டியுள்ளது. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியுடன் முதலீடு செய்கின்றனர். அதேசமயம் தங்கம் வாங்குவோரின் போக்கு முதலீடு என்ற கோணத்தில் மட்டுமே உள்ளது. உள்நாட்டில் தங்கத்தின் விலை உயர்வுக்கு பல்வேறு சர்வதேச காரணிகள் காரணமாக அமைந்துள்ளன. முதலீட்டுக்கான வட்டி விகிதம் குறைந்
தது, சர்வதேச வர்த்தகம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது, அரசியல் ஸ்திரமற்ற சூழல் ஆகியன தங்கம் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளன.

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்து வருவதும் தங்கத்தின் விலை உயர்வுக்குப் பிரதான காரணமாகும். கரோனா பாதிப்பு காரணமாக எழுந்துள்ள பாதுகாப்பற்ற சூழலும் விலை உயர்வுக்குக் காரணமாகும். கரோனா ஊரடங்கு காரணமாக எழுந்துள்ள ஸ்திரமற்ற சூழல் ஆகியவையும் தங்கத்தின் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.

தொடர்ந்து உயருமா?

அடுத்த 12 மாதங்களுக்கு தங்கத்தின் விலை ஏறுமுகத்தில்தான் இருக்கும். அமெரிக்க அதிபர் தேர்தல், கோவிட்-19 பிரச்சினையால் எழுந்துள்ள அசாதாரண சூழல், சர்வதேச அரசியல் பதற்ற நிலை ஆகியவை காரணங்களாக அமைந்துள்ளதாக பிஎன் காட்கில் நிர்வாக இயக்குநர் சவ்ரவ் காட்கில் தெரிவித்துள்ளார்.

அடுத்த 12 மாதங்களில் உள்நாட்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.65 ஆயிரத்தைத் தொடும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் (28.34 கிராம்) தங்கத்தின் விலை 2,500 டாலர் வரை உயரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பான முதலீடு

இந்தியாவில் திருமணம் சார்ந்த சடங்குகளில் தங்கம் பிரதானமானதாகக் கருதப்படுகிறது. பணவீக்கம் அதிகரிக்கும் ஸ்திரமற்ற சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்கும் என்று பலரும் கருதுகின்றனர்.

பணவீக்கத்தை ஈடுகட்டும் வகையிலான முதலீடாக தங்கம் கருதப்படுகிறது. சர்வதேச பொருளாதாரமும் வளர்ச்சி பாதையை நோக்கி நகரும்போது பணவீக்கம் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையும் போது அல்லது அதற்கான தடுப்பூசி விற்பனைக்கு வரும் சூழலில்தான் தங்கத்தின் விலை உயர்வு கட்டுக்குள் வரும் என்று மில்உட் கேன் இன்டர்நேஷனல் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான நிஷ் பட் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் முதலீட்டாளர்களின் பாதுகாப்பான தேர்வாக முதலிடம் பிடிப்பது தங்கம்தான் என்று ஐஷ்பிரா ஜெம்ஸ் அண்ட் ஜுவல்ஸ்நிறுவன இயக்குநர் விபவ் சரவ் தெரிவித்துள்ளார். நாடுகளின் எல்லைகளிடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல், வர்த்தக போர், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஆகியன தங்கத்தின் மீதான தேவையை அதிகரிக்கச் செய்துள்ளன. குறுகிய காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த சூழலுக்கேற்ப தங்கத்தின் சப்ளை இல்லாததால் அதன் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை ஸ்திரமடைந்த பிறகு மக்கள் அதை ஏற்று வாங்கத் தொடங்குவர். அதன் பிறகு மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.

ஆபரண தங்கம்

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆபரணத் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை குறையும் என்று தங்க நகை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே பொருளாதார தேக்கநிலை காரணமாக வழக்க
மான வர்த்தகத்தை விட 20 முதல் 25 சதவீத அளவுக்கே வர்த்தகம் நடைபெற்றது. வேலையிழப்பு, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டியது, ஊரடங்கு உள்ளிட்டவை காரணமாக வர்த்தகம் சரிந்துள்ளது. இந்நிலையில் தங்கத்தின் விலை அதிகரிப்பதால் தங்கம் வாங்குவோரது எண்ணிக்கை மேலும் குறையும் என்று அகில இந்திய ஜெம் அண்ட் ஜூவல்லரி உள்நாட்டு கவுன்சில் தலைவர் அனந்த பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x