

.பிரதமர் ஏழைகள் நல்வாழ்வு அன்னயோஜனா- II -இன் கீழ் உணவு தானியங்கள் விநியோகம் தொடங்கியுள்ளது. இதுவரை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மொத்தம் 33.40 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களைப் பெற்றுள்ளன.
2020 ஏப்ரல் முதல் ஜூன் வரை பிரதமர் ஏழைகள் நல்வாழ்வு அன்ன யோஜனா திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய பின்னர், மத்திய அரசு இந்தத் திட்டத்தை ஜூலை முதல் நவம்பர் 2020 வரை மேலும் ஐந்து மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், சுமார் 81 கோடி பயனாளிகள் பலனடைந்து வருகின்றனர்.
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், இலவசமாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் ஏழைகள் நல்வாழ்வு அன்னயோஜனா- II –இன் கீழ், ஜூலை முதல் நவம்பர் மாதம் வரையிலான ஒதுக்கீடு 200.19 லட்சம் மெட்ரிக் டன். ( 91.33 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 109.96 லட்சம் மெட்ரிக் டன் அரிசி. இந்தத் திட்டத்திற்கு மாநில அரசுகள் மற்றும் மக்களிடம் மிகவும் உற்சாகமான வரவேற்பு காணப்படுகிறது.
இந்தத் திட்டம் 08.07.2020 அன்று தொடங்கப்பட்டு, 27.07.2020 வரை. 33.40 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ( 13.42 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 19.98 லட்சம் மெட்ரிக் டன் அரிசி) , நாடு முழுவதும் மாநிலங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. பயனாளிகளுக்கு வழங்குவதற்காக அனுப்பப்பட்டுள்ள இந்தத் தொகுப்பில், 83 சதவீதம் ஜூலை மாதத்திற்கான ஒதுக்கீடாகும்.
பிரதமர் ஏழைகள் நல்வாழ்வு அன்னயோஜனா- II திட்டத்திற்காக கூடுதல் ஒதுக்கீடான 200.19 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியத்துடன் 5 மாதத்துக்கு பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு மத்திய
அரசு விநியோகிக்கும் உணவு தானியங்களின் மொத்த அளவு 455 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் பயனாளிகள் ஒவ்வொருவரும், தங்களுக்கு மானிய விலையில் வழக்கமாக வழங்கப்படும் உணவு தானிய ஒதுக்கீட்டுடன் கூடுதலாக 5 கிலோ கோதுமை அல்லது அரிசி முற்றிலும் இலவசமாகப் பெறுவார்கள்.
இந்திய உணவுக் கழகம் ஏற்கெனவே நடப்புப் பருவத்துக்கான கொள்முதல் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளது. கோதுமை மற்றும் அரிசி கொள்முதலில் புதிய சாதனை படைத்துள்ளது. அண்மையில் முடிவடைந்த பயிர் பருவத்தில், மொத்தம் 389.76 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 504.91 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பருவமழை இதே நிலை தொடர்ந்தால், வரும் 2020-21 கரீப் பருவமும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.