

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து, டீசல் விலையை தொடர்ந்து 2-வது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
இதன்படி, டீசல் லிட்டர் ஒன்றுக்கு 15 பைசா 2-வது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
கடந்த இரு நாட்களில் டீசல் விலை லிட்டருக்கு 30 பைசா அதிகரித்துள்ளதால், தலைநகர் டெல்லியில் எப்போதும் இல்லாத வகையில் முதல்முறையாக சில்லரையில் லிட்டர் ரூ.81.94 பைசாவுக்கு விற்கப்படுகிறது.
பெட்ரோல் விலையில் கடந்த 4 வாரங்களாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடைசியாக கடந்த மாதம் 29-ம் தேதி விலை மாற்றப்பட்டது அதன்பின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் லிட்டர் ரூ.80.43 பைசா என்று தொடர்கிறது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.63 பைசாவாகவும், டீசல் கடந்த இரு நாட்களில் லிட்டர் ஒன்றுக்கு 25 பைசா விலை உயர்ந்து ரூ.78.86 பைசாவகும் அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் 7-ம் தேதிமுதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 21 நாட்களாக உயர்த்தப்பட்டது. இதில் பெட்ரோல் லிட்டர் ரூ.9.17 பைசா உயர்த்தப்பட்டது. டீசல் லிட்டருக்கு ரூ.12.55 பைசா உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் பெட்ரோல் விலை கடந்த மாதம் 29-ம் தேதி முதல் லிட்டர் 87.19 பைசா என்ற அளவிலேயே இருந்து வருகிறது. டீசல், இன்றைய விலையில் லிட்டர் ரூ.80.11 பைசாவுக்கு விற்கப்படுகிறது.
கரோனா வைரஸ் லாக்டவுனால் மார்ச் 25-ம் தேதிமுதல் தொடர்ந்து 82 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மோசமாக வீழ்ச்சியடைந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை.
ஆனால், ஜூன் 7-ம் தேதியிலிருந்து தொடர்ந்து 21-நாட்கள் சர்வதேச சந்தையி்ல் விலைமாற்றத்தைக் குறிப்பிட்டு விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின என்பது குறிப்பிடத்தக்கது.