Published : 26 Jul 2020 07:42 AM
Last Updated : 26 Jul 2020 07:42 AM

கரோனா ஊரடங்கு பாதிப்பு எதிரொலி; வங்கிகளில் திரும்பாக் கடன் அதிகரிக்க வாய்ப்பு: ரிசர்வ் வங்கி கவர்னர் எச்சரிக்கை

வங்கிகளில் திரும்பாக் கடன் (Bad Loans) அளவு அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் எச்சரித்துள்ளார். இந்த அளவானது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மார்ச் மாத இறுதியில் வங்கிகளில் திரும்பாக் கடன் 8.5 சதவீதமாக இருந்தது. 2021 மார்ச்சில் இந்தஅளவானது 12.5 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலைமை இதேபோல தொடரும்பட்சத்தில் இந்த அளவானது 14.7 சதவீத அளவுக்கு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாகஅவர் குறிப்பிட்டார். நிதி நிலை ஸ்திரத்தன்மை தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய சூழலில் வங்கிகள் ஏற்கெனவே நிறுவனங்கள் பெற்றுள்ள கடனுக்கு மேல் கூடுதலாக கடன் வழங்க வேண்டிய நிலையில் உள்ளன. இதனால் வங்கிகளுக்கு கூடுதல் நெருக்குதல் ஏற்படும்.

உலகம் முழுவதுமே அரசுகளும், கட்டுப்பாட்டு அமைப்புகளும் கடன் வழங்குவதில் உள்ள சிரமங்களைக் குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. கரோனா வைரஸ் பாதிப்பைக் குறைக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக முடங்கியுள்ள தொழில்களை மீண்டும் முடுக்கி விடுவதற்காக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் மூலதனத்தை அதிகரிக்க கடனுக்கு மேல் கூடுதலாக கடன் வழங்குவது வங்கிகளுக்கு மேலும் நெருக்குதலை உருவாக்கும். வங்கிகள் குறிப்பிட்ட மூலதனத்துடன் செயல்பட வேண்டும் என்பதை வரையறுக்கும் பேசல் விதிகள் இதுபோன்ற அத்தியாவசியமான காலகட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை அங்கீகரித்துள்ளது. எனினும் கடன் வழங்குவதில் வங்கிகள் உரிய முறையில் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கிகள் வாராக் கடனுக்கு (என்பிஏ) தங்களது லாபத்தில் ஒதுக்கிவிடுமாறு ஆர்பிஐ அறிவுறுத்தியது. இதன் காரணமாக வங்கிகளின் லாபம் கணிசமாக குறைந்தது. இந்த நிலையில் இருந்து வங்கிகள் மீண்டு தற்போது வரத் தொடங்கியுள்ளன. ஆனால் கரோனா ஊரடங்கால் வங்கிகளின் நிதி நிலை அறிக்கை மோசமடைவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

திரும்பாக் கடன் கடந்த 3 ஆண்டுகளாகக் குறைந்து வந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு 11.5 சதவீதமாகவும், 2019-ம் ஆண்டில் 9.3 சதவீதமாகவும், மார்ச் 2020-ல்8.5 சதவீதமாகவும் குறைந்து வந்தது. வங்கிகள் வாராக் கடனுக்கு லாபத்தில் தொகை ஒதுக்கியதால் அவற்றுக்கு கூடுதல் மூலதனம் தேவைப்படுகிறது. வங்கிகளின் மூலதன விகிதம் கடந்த ஆண்டு 15 சதவீதமாக இருந்தது மார்ச் 2020-ல் 14.8 சதவீதமாக சரிந்தது. வங்கிகள் வழங்கியுள்ள பெருமளவு கடனில் அதிகம் பெற்றவை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களே. இவை 65 சதவீதமும், தனி நபர் கடன் 55 சதவீதமும், நிறுவனங்கள் பெற்ற கடன் 42 சதவீதமாகவும் உள்ளதாக ஆர்பிஐ அறிக்கை தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x