Last Updated : 24 Jul, 2020 10:26 AM

 

Published : 24 Jul 2020 10:26 AM
Last Updated : 24 Jul 2020 10:26 AM

அரசு கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கி தொடர்ந்து வாங்கி வருகிறது, இது தீர்வல்ல, மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை

கரோனா ஏற்படுத்திய தாக்கத்தினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அரசுக் கடன் பத்திரங்களை மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக வாங்கி வருகிறது, இது நிச்சயம் நிரந்தரமான தீர்வாக இருக்காது. மாறாக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் டிபிஎஸ் வங்கி நடத்திய கருத்தரங்கில் ரகுராம் ராஜன் இது தொடர்பாகப் பேசியதாவது:

ஆர்பிஐ தனது பேலன்ஸ் ஷீட்டை விரிவாக்கம் செய்து வருகிறது. அரசுக் கடன்பத்திரங்களை தொடர்ச்சியாக வாங்கி வருகிறது. ஆனால் இந்த நடைமுறையில் ஆர்பிஐ என்ன செய்கிறது என்றால் நாட்டின் வங்கிகளிடமிருந்து ரிவர்ஸ் ரிபோ ரேட்டில் தொகையினை வாங்கி அதனை அரசுக்கு கடனாக அளிக்கிறது.

இப்போது நாட்டில் பணப்புழக்கம் அதிகம் உள்ளது, ஆனால் மக்கள் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் பணத்தை சேமிக்கின்றனர். கடனுக்கான தேவைப்பாடு மிகவும் மந்தமாக உள்ளது. வங்கிகள் என்ன செய்கிறது தங்கள் பணத்தை ரிவர்ஸ் ரிபோ விகிதத்தில் ஆர்பிஐயில் வைக்கின்றது, இதனால் வங்கிகளுக்கு குறைந்த வருவாயே கிடைக்கும்.

நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்க அதிகப் பணப்புழக்கம் என்ற கோட்பாட்டை சில பொருளாதார வாதிகள் முன்னெடுக்கின்றனர். இதனை தற்போதைய சூழலுக்கான தீர்வாக முன் வைக்கின்றனர். ஆனால் இது நிரந்தரத் தீர்வல்ல. குறைந்த காலத்துக்கே இப்போக்கைக் கடைப்பிடிக்க முடியும்.

எப்போது பணமாக்க நடவடிக்கை முடியும்? இப்போதைக்கு வங்கிகள் கடன் வழங்குவது குறைந்துள்ளதால் மத்திய வங்கிகள் பணப்பெருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இது ஆர்பிஐ-க்கும் அரசுக்கும் இடையேயான கூட்டுறவுக்கு வழிவகுக்கும். ஆனால் இந்த ஏற்பாடுகள் எத்தனை நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பதற்கு வரையறை உள்ளது.

நாம் பொருளாதாரத்தை கோமாவில் வைத்திருக்கிறோம். விழித்துக் கொள்ளும் போது அனைவரும் படுக்கையிலிருந்து எழுந்து முழு வாழ்க்கையை மீண்டும் வாழத் தயாராகி விடுவார்கள் என்று நினைப்பது அதீதமான நம்பிக்கையாகும் அப்படிக் கருத முடியாது.

சிறிய ஜனநாயக நாடுகள் அமெரிக்கா, சீனா ஆகிய வலுவான பொருளாதார நாடுகள் இரண்டையும் சச்சரவுகளை விடுத்து ஒன்று சேர முயற்சிக்க வேண்டும். அமெரிக்காவில் வரும் அதிபர் தேர்தல் விஷயங்கள் போகும் விதத்தை மாற்றும் என்று நம்புகிறேன்.

என்றார் ரகுராம் ராஜன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x