

வால்மார்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை பிளிப்கார்ட் குழுமம் முழுவதுமாக வாங்கியுள்ளது.
சிறு வர்த்தகர்கள் மற்றும்குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் சில்லரை வர்த்தகத்துக்கான பிரதான சூழலாக விளங்குகின்றன. இவற்றை இலக்காகக் கொண்டு பிளிப்கார்ட் மொத்த விற்பனை அமையும்.
மளிகை பொருட்கள், பிற பொதுவான பொருட்கள், ஃபேஷன் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் மொத்தமாக வாங்குவதற்கு ஒரே அங்காடியாக பிளிப்கார்ட் இருக்கும். வர்த்தகர்களுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களும், ஊக்க விலை சலுகைகளும் இங்கு அளிக்கப்படும். தற்போது 15 லட்சம் வர்த்தகர்கள், சிறு வணிகர்கள், எம்எஸ்எம்இ-க்கள் தங்களது உறுப்பினர்களாக உள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
இந்திய தயாரிப்புகள், உள்ளூர் தயாரிப்புகள், விற்பனையாளர்களும் பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து பொருட்களை விற்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்வேறு பொருட்களும் இங்கு கிடைக்கும். பிளிப்கார்ட் குழுமம் வால்மார்ட் இந்தியா நிறுவனத்தை வாங்கியதன் மூலம் மொத்த வர்த்தகத்தில் அந்நிறுவனத்துக்குள்ள நிபுணத்துவம் பிளிப்கார்ட் நிறுவனத்துக்குக் கிடைக்கும் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். இதன் மூலம் சில்லரை வர்த்தகர்கள் மற்றும் எம்எஸ்எம்இ-க்களின் பிரத்யேக தேவையை பூர்த்தி செய்ய இயலும் என்று அவர் தெரிவித்தார்.
பிளிப்கார்ட் மொத்த விற்பனை செயல்பாடு ஆகஸ்ட் மாதம் தொடங்கும். முதல் கட்டமாக மளிகை மற்றும் ஃபேஷன் பொருட்கள் விற்பனை நடைபெறும். இப்பிரிவுக்கு தலைவராக பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆஷர்ஷ் மேனன் இருப்பார்.
நிறுவன கையகப்படுத்தல் நடவடிக்கை சுமுகமாக நடைபெற வால்மார்ட் தலைமைச் செயல் அதிகாரியாக சமீர் அகர்வால் தொடர்வார். பின்னர் அவர் வால்மார்ட் நிறுவனத்துக்கு மாறுவார். வால்மார்ட் நிறுவன ஊழியர்கள் இனி பிளிப்கார்ட் குழும பணியாளர்களாவர். பெஸ்ட் பிரைஸ் பிராண்ட் தொடர்ந்து தனது உறுப்பினர்களுக்கான சேவையை அளிக்கும். இந்நிறுவனத்துக்கு 28 வணிக வளாகமும் இ-காமர்ஸ் செயல்பாடுகளும் உள்ளது.