

‘‘உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்து கொண்டு சர்வதேச வர்த்தகத்திலும் உலகளாவிய இடத்தைப் பிடிக்கும் சாத்தியமுள்ள 20 துறைகளை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது’’ என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் பியுஷ் கோயல் கூறியதாவது:
இந்தியா தனது உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டு சர்வதேச வர்த்தகத்திலும் உலளாகவிய பங்காற்றும் வகையில் எந்தெந்த துறைகள் உள்ளன என்பதை ஆய்வு செய்து வருகிறோம். இந்தப் பணியில் முதலில் 12 துறைகள் அடையாளம் காணப்பட்டன. இப்போது வேறு 8 துறைகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.
இந்தத் துறைகளை மேம்படுத்துவதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தில் முன்னணி இடத்தை பிடிக்க முடியும். இது தொடர்பாக ஃபிக்கிஉள்ளிட்ட தொழில்துறை கூட்டமைப்புகள் அரசுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன. இவ்வாறு பியுஷ் கோயல் கூறினார்.
மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ள 20 துறைகளில் உணவுப் பதப்படுத்துதல், இயற்கை விவசாயம், அக்ரோ கெமிக்கல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ். தொழில்துறை இயந்திரங்கள், ஃபர்னிச்சர், தோல் பொருட்கள், ஆட்டோ உதிரி பாகங்கள், டெக்ஸ்டைல் உள்ளிட்டவை அடக்கம்.
பல துறைகளில் உலகின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. ஃபர்னிச்சர் சந்தையில் உலகின் பிரதான உற்பத்தி சந்தையாக இந்தியாவை உருவாக்க முடியும். மேலும் யோகா தொடர்பாக உலகளவில் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியா யோகாவில் பெரிய சந்தையை உருவாக்க முடியும். இதற்கு தொழில் முனைவோர்கள் தயாராக இருக்கிறார்களா? பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல் உலகம் முழுவதும் ஒரு லட்சம் யோகா மையங்களை அமைக்க தயாராக இருக்கிறோமா? இதன் மூலம் உலகளவில் 5 லட்சம் யோகா ஆசிரியர்களுக்கான தேவைஉருவாகும் என்றும் அமைச்சர் கூறினார்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் நெருக்கடி உருவாகி இருக்கிறது. ஆனால், எதுவும் முழுமையாக முடிந்துவிடவில்லை. நெருக்கடியிலும் பல வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இளைஞர்கள் புத்தாக்க சிந்தனைகளுடன் களம் இறங்க வேண்டும். தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியர்களும் உலகளவில் சந்தையைப் பிடிக்க முடியும் என்று பியுஷ் கோயல் கூறினார்.