Published : 21 Jul 2020 03:34 PM
Last Updated : 21 Jul 2020 03:34 PM

அரபிக்கடல் பகுதியில் வர்த்தக, மீன்பிடிக் கப்பல்களுக்கு இனி தனி வழித்தடம்: ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமல்

நீண்ட கால கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய கப்பல் துறை அமைச்சகம், தென்மேற்கு இந்திய கடற்பரப்பில் வர்த்தக மற்றும் மீன்பிடிக் கப்பல்கள், பாதுகாப்பாகவும், விரைவாகவும் செல்வதற்கு தனித்தனியான வழித்தடங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையைச் சுற்றியுள்ள அரபிக்கடல் பகுதியானது, கணிசமான வர்த்தக கப்பல்களும், ஏராளமான மீன்பிடிக் கப்பல்களும் வந்து செல்லும் பரபரப்பான கடல் வழித்தடமாகும். இதனால் சில நேரங்களில் விபத்துகள் நேரிட்டு, சொத்துகள் சேதமடைவதும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும், உயிரிழப்பும் நிகழ்கிறது.

அமைச்சகத்தின் இந்த முடிவானது, இந்திய கடற்பரப்பில் எளிதாக கப்பல்கள் செல்வதை உறுதி செய்யும் மத்திய அரசின் கடப்பாட்டை பிரதிபலிப்பதாக மத்திய கப்பல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார். இந்த முடிவானது, கப்பல்கள் மோதலைத் தவிர்க்கவும், கடல் போக்குவரத்தை எளிதாக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும், கடல் சுற்றுச்சூழலை சிறப்பாக பராமரிக்கவும் பயன்படும் என்றும் இந்தப் பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்தை திறம்பட சீரமைக்க உதவும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்தப் புதிய வழித்தடங்கள், கப்பல் துறை தலைமை இயக்குனரின் அறிவிக்கையின்படி, 2020 ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x