

வருமான வரி செலுத்துபவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு வருமான வரியை, தாமாகவே முன்வந்து செலுத்துவதற்காக வரும் 20-ம் தேதி முதல் மத்திய நேரடி வரிகள் வாரியம் விழிப்புணர்வு நடவடிக்கையை தொடங்க உள்ளது.
இந்த 11 நாள் பிரச்சாரம் 31 ஜூலை 2020 வரை நடைபெறும். 2018-19ஆம் நிதியாண்டிற்கான வருமான வரியைச் செலுத்தாதவர்கள் அல்லது வருமான வரி செலுத்துவதில் ஏதேனும் பிரச்னைகள்/வேறுபாடுகள் இருப்பவர்கள் வரி செலுத்துவோர், வரி செலுத்த வேண்டியவர்கள் ஆகியோருக்கான பிரச்சாரமாக இது அமையும்
வருமான வரித்துறையில் ஆன்லைனில் உள்ள தகவல்களை சரிபார்த்து தங்களது வரி/ நிதி பரிவர்த்தனை குறித்த தகவல்களை சரிசெய்து கொள்ள வரி செலுத்த வேண்டியவர்களுக்கு குறிப்பாக 2018-19 நிதி ஆண்டிற்கு வரி செலுத்த வேண்டியவர்களுக்கு உதவுவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதனால் நோட்டீஸ் பெறப்பட்ட பிறகு, பரிசோதனை முறைகள் நடத்தப்பட்ட பிறகு, வரி செலுத்துவது என்பதைத் தவிர்த்து வரி செலுத்த வேண்டியவர்கள் தாமாகவே முன்வந்து வரி செலுத்துவதை ஊக்குவிக்க இது உதவும்.
வரி செலுத்துபவர்களின் நன்மைக்காகவே இந்தப் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பணப் பரிமாற்ற அறிக்கைகள் (எஸ்எஃப்டி), ஆதார நிலையிலேயே வரி பிடித்தம் செய்தல் (டி டி எஸ்), ஆதார நிலையிலேயே வரி வசூலித்தல் (டி சி எஸ்), வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள் (15 சிசி விண்ணப்பம்) போன்ற பல்வேறு ஆதாரங்களின் மூலம் வருமான வரித்துறைக்கு கிடைத்துள்ள பணப்பரிமாற்றங்கள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலமாக தெரிந்தெடுக்கப்பட்ட வரி செலுத்துபவர்களுக்கு, வருமான வரித்துறையால் அனுப்பப்படும். ஜிஎஸ்டி ஏற்றுமதி, இறக்குமதி, பங்குப் பரிவர்த்தனைகள், டெரிவேட்டிவ் /கமாடிட்டி பரிவர்த்தனைகள், பரஸ்பர நிதி பரிவர்த்தனைகள் ஆகியவை குறித்த தகவல்களும் வருமான வரித்துறையால் தகவல் டிரியங்குலேஷன் அமைப்பு மற்றும் தரவு ஆய்வு மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன.
2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரியை வருமான வரி மதிப்பீடு ஆண்டான 2019-20இல் செலுத்தாதவர்கள் உயர் மதிப்பிலான பணப்பரிவர்த்தனைகள் மேற்கொண்டிருந்தால், அவை பற்றிய தகவல்கள் தர ஆய்வு மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் மட்டுமல்லாமல், வருமான வரித் தாக்கல் செய்து ஆனால் உயர் மதிப்பிலான பணப்பரிவர்த்தனைகளை அதில் குறிப்பிடாமலிருந்த வருமான வரியை செலுத்த வேண்டியவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் உயர்மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தகவல்களை வரி செலுத்துவோர் இந்த இணையதளத்திலிருந்து பெறமுடியும். இந்தத் தகவல்கள் குறித்த தங்களுடைய எதிர்வினைகளையும், வருமான வரி செலுத்துபவர்கள் பதிவு செய்யமுடியும். i) இந்தத் தகவல் சரியானது ii) இந்தத் தகவல் முழுமையாக சரியானது அல்ல iii) இந்தத் தகவல் வேறு ஒரு நபர்/ ஆண்டு தொடர்புடையது iv) இந்தத் தகவல் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது/ வேறு ஒரு இடத்தில் இந்தத் தகவல் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது v) இந்தத் தகவல் மறுக்கப்படுகிறது என்று ஐந்து குறிப்புகள் அளிக்கப்பட்டிருக்கும். இவற்றில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம். இந்தத் தகவல்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே கொடுக்கப்பட வேண்டும் என்பதால் வருமானவரி அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
2018-19 நிதியாண்டிற்கான வருமானவரி தாக்கல் செய்வதற்கான 2019-20 வருமானவரி மதிப்பீட்டு ஆண்டிற்கு, வருமானவரித் தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் 31 ஜூலை 2020.வருமான வரி செலுத்துபவர்கள் தங்களுடைய நன்மைக்காக எளிய முறையிலான இந்த இயக்க வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்