

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணியில் திகழும் ஹெச்சிஎல் நிறுவனத்தின் புதிய தலைவராக ரோஷ்ணி நாடார் பொறுப்பேற்றுள்ளார். நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடார்பொறுப்பில் இருந்து விலகினார். புதிய பொறுப்பை ரோஷ்ணிநாடார் மல்ஹோத்ரா உடனடியாக ஏற்பதாக பிஎஸ்இ-க்கு அனுப்பப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷிவ் நாடார் விலகினாலும் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக (எம்டி) அவர் தொடர்வார். அத்துடன் கூடுதல் பொறுப்பாக தலைமை உத்தி வகுக்கும் அதிகாரியாக அவர் இருப்பார் என பிஎஸ்இ-க்கு அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) நிறுவனத்தின் லாபம் ரூ.2,220 கோடியாக உயர்ந்துள்ளது.
நிறுவனத்தின் வருமானம் 8.6 சதவீதம் அதிகரித்து ரூ.17,841 கோடி உயர்ந்துள்ளது. முந்தைய நிதி ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய வருமானம் ரூ.16,425 கோடியாக இருந்தது.
நிறுவனத்தில் 1,50,287 பணியாளர்கள் உள்ளனர். கூடுதலாக7,005 பணியாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தில் இருந்து வெளியேறுவோர் விகிதம் 14.6 சதவீதமாக உள்ளது.
இந்தியாவின் பணக்கார பெண்மணிகளில் ஒருவராக ரோஷ்ணி உயர்ந்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.31,400 கோடியாகும். இவருக்கு வன விலங்குகள் மீது அதீத ஆர்வம் உண்டு. இதற்காக இவர் ஹேபிடட்ஸ் அறக்கட்டளையை உருவாக்கி அதை கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
டெல்லியில் வளர்ந்த ரோஷ்ணி,அமெரிக்காவின் கெல்லாக் நிர்வாகவியல் மையத்தில் வணிகவியல் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம்பெற்றவர். சர்வதேச பொருளாதார கூட்டமைப்பின் அங்கத்தினராகவும் உள்ளார். உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களில் ஒருவராகவும் இவர் விளங்குகிறார்.