செலவை குறைக்க நடவடிக்கை எடுங்கள்: ரயில்வே அதிகாரிகளுக்கு பியூஷ் கோயல் வலியுறுத்தல்

செலவை குறைக்க நடவடிக்கை எடுங்கள்: ரயில்வே அதிகாரிகளுக்கு பியூஷ் கோயல் வலியுறுத்தல்
Updated on
1 min read

வருவாயை அதிகரிக்கவும், செலவைக் குறைக்கவும் ரயில்வே ஒட்டு மொத்த கவனம் செலுத்த வேண்டும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சகம், பணியாளர்களுக்கான இணைய வழிக் கருத்தரங்கை முதன்முறையாக நடத்தியது. இக்கருத்தரங்கில் நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு ரயில்வே பணியாளர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். இதில் மத்திய ரயில்வே, வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் சி அங்காடி, ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ், ரயில்வே வாரியத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

AIRF, NFIR இரண்டு கூட்டமைப்புகளின் அலுவலகப் பொறுப்பாளர்களான ராகல் தாஸ் குப்தா, கும்மன் சிங், ஷிவ் கோபால் மிஸ்ரா, டாக்டர் எம் ராகவையா, ஆகியோருடன், இதர அலுவலகப் பொறுப்பாளர்களும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

கருத்தரங்கில் பேசிய பியூஷ் கோயல், பொதுமுடக்கக் காலத்தின் போது அயராது பணியாற்றி கடமையைச் செய்ததற்காக ரயில்வே பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். “உயர் நிலையிலிருந்து கீழ் நிலை வரை உள்ள அனைத்து அதிகாரிகளும், பணியாளர்களும் பொதுமுடக்கக் காலத்தின் போது தங்களது கடமைகளை மனமாரச் செய்தனர்.

தற்போது பெருந்தொற்று நோய் சமயத்தில் இந்திய ரயில்வே கடினமான காலத்தில் சென்று கொண்டிருக்கிறது”. பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த நெருக்கடி நிலைமையை எவ்வாறு எதிர் கொள்வது என்று அனைத்து சங்கங்களின் தலைவர்களும் யோசிக்க வேண்டும் என்று அமைச்சர் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார்.

ரயில்வே துறையின் வருமானத்தை அதிகரிப்பது, செலவைக் குறைப்பது, சரக்குப் போக்குவரத்திற்கான பங்கை அதிகரிப்பது, ரயில்வே துறை விரைவாகவும் மென்மேலும் பெருகுவது ஆகியவை குறித்து தனித்துவம் வாய்ந்த ஆலோசனைகளை வழங்குமாறு ரயில்வே கூட்டமைப்புகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தற்போதுள்ள ஊழியர்களின் பாதுகாப்பு, நலன் ஆகியவை குறித்தும் யோசனை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தக் காலகட்டத்தில் ரயில்வே அதிகாரிகள், சங்கங்கள், பணியாளர்கள் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in