Last Updated : 15 Jul, 2020 04:22 PM

 

Published : 15 Jul 2020 04:22 PM
Last Updated : 15 Jul 2020 04:22 PM

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள் நிறுவனம் 

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தொழில்நுட்பப் பிரிவான ஜியோ நிறுவனத்தில் ரூ.33 ஆயிரத்து 737 கோடி முதலீடு செய்து ரூ.7.7 சதவீதப் பங்குகளை வாங்குவதற்கு கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ரிலையன்ஸ் நிறுவனத்தில் நிறுவனங்கள் செய்த முதலீடு ரூ.1.52 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் மும்பையில் இன்று நடந்தது.

இதில் அந்த நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது:

“ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவான ஜியோ நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் முக்கிய முதலீட்டாளராக வருவதை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டு ஜியோவில் 7.7 சதவீதப் பங்குகளை ரூ.33,737 கோடிக்கு வாங்குகிறது.

இதுவரை ஜியோ நிறுவனத்தில் 32.84 சதவீதப் பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதுவரை ஜியோ நிறுவனம் ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 55 கோடி முதலீடு பெற்றுள்ளது. கடந்த 12 வாரங்களில் ஜியோவில் முதலீடு செய்த 13-வது நிறுவனம் கூகுள் ஆகும். இதன் மூலம் ஜியோ நிறுவனத்தின் மதிப்பு ரூ.4.36 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் குவால்காம் நிறுவனம் முதலீட்டையும் சேர்க்கும்போது, ரூ.4.91 லட்சமாக அதிகரித்துள்ளது.

ஃபேஸ்புக் மற்றும் இதர நிறுவனங்கள் மூலம் ஜூன் மாதத்திலிருந்து ரூ.53,124 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துக்குச் சில்லறை விற்பனை நெட்வொர்க்கில் 49 சதவீதப் பங்குகள் ரூ.7,629 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாக மாறியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.2 லட்சத்து 12 ஆயிரத்து 809 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், பப்ளிப் இன்வெஸ்ட் ஃபன்ட், சில்வர் லேக், ஜெனரல் அட்லாண்டிக் ஆகியவை மூலம் ரூ.73,536 கோடி முதலீடு வந்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.43,573 கோடி முதலீடு செய்து 9.99 சதவீதப் பங்குகளை கையகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 6 நிறுவனங்களான சில்வர் லேக் பார்ட்னர் 2.08 சதவீதம் பங்குகள்(ரூ.10,202 கோடி), விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ் 2.32 சதவீதப் பங்குகள் (ரூ.11,367 கோடி), ஜெனரல் அட்லாண்டிக் 1.34 சதவீதப் பங்குகள் (ரூ.6.598 கோடி), கேகேஆர் 2.22 சதவீதப் பங்குகள் (ரூ.11,367 கோடி), டிபிஜி நிறுவனம் 0.93 சதவீதப் பங்குகள்(ரூ.4546 கோடி), எல்காட்டர்ரடன் 0.39 சதவீதப் பங்குகள் (ரூ.1,894 கோடி) முதலீடு செய்துள்ளன. அமெரிக்காவின் குவால்காம் நிறுவனம் ரூ.730 கோடி முதலீடு செய்துள்ளது

மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்தும் ஜியோ நிறுவனம் முதலீடு பெற்றுள்ளது. முபாதலா ரூ.9,093 கோடி, சவுதி அரேபியாவின் சாவரின் வெல்த் ஃபண்ட் (ரூ.11.367 கோடி), பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் (ரூ.5,683 கோடி) அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அதாரிட்டி ஆகியவை முதலீடு செய்துள்ளன''.

இவ்வாறு முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x