Published : 13 Sep 2015 11:18 AM
Last Updated : 13 Sep 2015 11:18 AM

வணிக நூலகம்: மாற்றத்தின் வழியே முன்னேற்றம்!

இன்றைய நவீன உலகில், புதுமை என்பது அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சாதாரண விஷயமாகிவிட்டது. எல்லாவற் றிலும், எந்நேரமும் ஏதோ ஒரு வடிவத்தில் புதுமையான கருத்துகளோ, விஷயங்களோ அல்லது பொருட்களோ நம்மை வந்தடைந்து கொண்டே இருக்கின்றன. பொதுவாக, புதுமை என்ற சொல்லே வழக்கமானதாக, பழமையான தாக மாறிவிட்டது என்றே சொல்லலாம்.

புதிய யோசனைகளும், திட்டங்களுமே முன்னேற்றம் என்னும் வண்டியின் சக்கரங்கள் என்கிறார் “ஐடியாஷிப்” என்ற இந்த புத்தகத்தின் ஆசிரியர் “ஜாக் ஃபோஸ்டர்”. மாறிவரும் காலத்திற்கேற்ற புதிய புதிய திட்டங்களும், மாற்றங்களுமே பொருளாதாரத்தை வழிநடத்தவும், தொழில்களை மேம்படுத்தவும் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அடித்தளமாக அமைகின்றன. அப்படிப்பட்ட புதிய சிந்தனைகள் நம் மனதிலும், நம்மைச் சுற்றியுள்ளவர்களின் மனதிலும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதற்கேற்ற சூழ்நிலைகள் பற்றிய வழிமுறைகளைச் சொல்கின்றது இந்த புத்தகம்.

சக பணியாளர்கள்!

நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்று கிறீர்கள். உங்களுடன் பலரும் பல்வேறு நிலை களில் பணியாற்றுகிறார்கள். அது உங்களுடைய மேலதிகாரியோ அல்லது உங்களுடைய உதவியாளர்களோ, யாராக இருந்தாலும் அவர் களுக்கான மதிப்பையும், அங்கீகாரத்தையும் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒன்றுபட்ட, மகிழ்ச்சியான சூழ்நிலையே புதிய எண்ணங்களை உருவாக்கும் என்பதை ஒரு போதும் மறந்துவிடக்கூடாது. ஆக, மற்றவர் களை நம்மோடு சேர்ந்த மனிதர்களாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர ஒருபோதும் தொழி லாளியாகவோ, உதவியாளராகவோ, பயிற்சி யாளராகவோ, ஊழியராகவோ, தாழ்ந்தவ ராகவோ, உயர்ந்தவராகவோ பார்க்கக்கூடாது.

நீங்கள் எந்த கண்ணோட்டத்துடன் அவர்களை பார்க்கிறீர்கள் என்பதை பொருத்தே உங்களுக்கான அவர்களின் செயல்பாடு அமையும் என்பதே உண்மை. அவர்களுடனான உங்களின் சரியான அணுகுமுறையே, உங்கள் மீதான அவர்களின் நம்பிக்கை, உங்களுக்கான அவர்களின் உதவி, உங்களது கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் ஆகியவற்றைப் பெற்றுத்தரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவ்வளவு ஏன், உங்களது தவறுகளைக்கூட மறந்துவிடும் மனநிலையை பெற்றிருப்பார்கள்.

நம்பிக்கையினை ஏற்படுத்துங்கள்!

வீடோ அல்லது அலுவலகமோ, நம்மீது மற்றவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டால் போதும். மற்றவையெல்லாம் தானாக, சரியாக நமக்கு வந்து சேர்ந்துவிடும். உங்களது சரியான அணுகுமுறையால், மற்றவர்கள் உங் களை முழுமையாக நம்பும்போது, உங்களது அனைத்து செயல்பாடுகளுக்கும் ஆதரவளிக்க தொடங்கிவிடுவார்கள். அந்த செயல்பாடுகளில் அவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கூட. அதேசமயம், உங்களது தவறான அணுகுமுறையால், மற்றவர்கள் உங்களை முழுமையாக நம்பத்தயாராக இல்லாதபோது, உங்களது செயல்பாடுகளுக்கு துணை நிற்க முன்வரமாட்டார்கள். அந்த செயல்பாடுகளில் அவர்களுக்கு விருப்பம் இருந்தாலும் கூட.

“சக பணியாளர்கள் என்பவர்கள் உங்க ளுடன் பணிபுரிகின்றார்களே தவிர, உங்களுக் காக பணிபுரியவில்லை” என்பதை அடிக்கடி உங்களுக்குள் நினைவுபடுத்திக்கொள்வது அவசியம். இந்த எண்ணமே, அவர்களுக் கான மதிப்பை உங்களிடமிருந்து வெளிக் கொண்டுவரும் என்கிறார் ஆசிரியர்.

பழியும் பாராட்டும்!

ஒரு குழுவிற்கான தலைமை பொறுப்பில் இருக்கிறீர்கள். உங்கள் குழுவினரின் சரியான செயல்பாட்டிற்கான பாராட்டும், தவறான செயல் பாட்டிற்கான பழியும் உங்களிடமே வந்து சேரும் அல்லவா! இதில் பழியை மட்டும் உங்களிடம் வைத்துக்கொண்டு, பாராட்டை உங்கள் குழுவினருக்கு அளித்துவிட வேண்டும் என்கிறார் ஆசிரியர். தலைமைப் பண்பிற் கான மிகச்சிறந்த காரணியாகவே இது பார்க்கப்படுகின்றது. மேலும், இது உங்கள் மீதான மதிப்பை மட்டுமல்லாமல், உங்கள் குழுவினரின் செயல்பாட்டினையும் அதிகரிக்கும்.

தவறான செயல்பாட்டினால் கிடைக்கும் பழியை நீங்கள் மற்றவர்களின் மீது திணிக்கும்போது, குழுவினரின் செயல்வேகம் குறைந்து, அது அடுத்தகட்ட விளைவான தோல்வியை நோக்கியே செல்லும். அதுபோலவே, சரியான செயல்பாட்டினால் நீங்கள் பெரும் பாராட்டை மற்றவர்களிடம் கொடுக்கும்போது, குழுவினரின் செயல்வேகம் அதிகரித்து, அடுத்தகட்ட வெற்றியை நோக்கி செல்லும். இது போன்ற சின்ன சின்ன தற்காலிக வெகுமதிகளை கவனமாக கையாளும்போது, நிலையான வெற்றியை கைப்பற்றலாம்.

உங்கள் உதவி, உங்கள் வெற்றி!

உங்கள் பணியாளர்களுக்கு நீங்கள் செய்யும் சிறு சிறு உதவிகளே, அவர்களின் செயல்பாட்டை விரைவாக்கி, பெரிய வெற்றியாக உங்களிடம் வந்து சேர்க்கிறது. மாவீரன் நெப்போலியன் தன் படை வீரர்களிடம், போரில் வெற்றிபெறவேண்டும் என்று ஒருபோதும் சொன்னதில்லை. மாறாக, அவர்களின் பசிக்கு உணவையும், தேவையான நேரங்களில் விடு முறையும், சரியான அங்கீகாரமும், களைப் பான நேரங்களில் ஓய்வும், மழைக்கு கூடாரங் களையும் கொடுப்பாராம். அதுபோல, உங்கள் பணியாளர்களின் தேவைகளைக் கண்டறிந்து, அவற்றை அவர்கள் பெறுவதற்கான உதவிகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்வது அவசியமான ஒன்று. இது குறுகியகாலத்தில் அவர்களுக்கான உதவி என்றாலும், நீண்டகால நோக்கில் பார்க்கும்போது, நிறுவன வெற்றிக்கான செயல்பாடாகவே அமையும்.

தீர்வுகள் பலவிதம்!

எப்படிப்பட்ட செயலானாலும் மேலும் ஒரு முறை முயற்சித்து பார்ப்பதே சிறந்தது. இதன் மூலமே சிறந்த பலன்களைப் பெறமுடியும். உங்கள் பணியாளர்களிடம் ஒரு பிரச்சினையை முன்வைத்து, அதற்கான தீர்வை கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அது ஒரே தீர் வாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர் கள். வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற வேலையெல்லாம் பணிபுரியும் சூழ்நிலைக்கு ஏற் புடையதல்ல. பெரும்பாலான பிரச்சனைகளுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகள் கிடைப்பதுண்டு. நீங்கள், ஒரே ஒரு சரியான தீர்வை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில், உங்களுக்கான பல நல்ல தீர்வுகள் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.

பணியாளர்களிடம் இருந்து நீங்கள் பெறும் ஒவ்வொரு தீர்வுக்குமான அங்கீகாரத்தையும், பாராட்டையும் முழுமையாக அவர்களுக்கு கொடுத்து, அதன்பின் மற்றுமொரு மாறுபட்ட தீர்வுக்காக முயற்சி செய்ய சொல்லுங்கள். ஒவ்வொருமுறையும் இதையே பின்பற்றும்போது, இறுதியில் மிகச்சிறந்த தீர்வு உங்கள் கையில் கிடைக்கும். இந்த உலகில், மிகச்சிறந்த ஓவியம் இன்னும் வரையப்படவில்லை, மிகச்சிறந்த நாடகம் இன்னும் எழுதப்படவில்லை, மிகச்சிறந்த பாடல் இன்னும் பாடப்படவில்லை என்பதை மனதில் நிறுத்தி செயலாற்றும்போது சிறப்பான வெற்றியை பெறமுடியும்.

குறுக்கீடு செய்யாதீர்கள்!

ஒரு இடத்திற்கு செல்வதற்காக வாடகை கார் ஒன்றில் பயணம் செய்கிறீர்கள். நீங்கள் செல்லவேண்டிய இடத்தை மட்டுமே ஓட்டுனரிடம் சொல்வீர்களே தவிர காரை எப்படி ஓட்ட வேண்டும் என்று சொல்லமாட்டீர்கள் அல்லவா!. அதுபோலதான், பணியாளர்களுக்கான இலக்கினை மட்டும் அவர்களுக்கு கொடுங்கள், அவர்களது செயல்பாட்டு முறைகளில் குறுக்கீடு செய்யாதீர்கள், இலக்கிற்கான பாதையை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ள உதவி செய்யுங்கள்.

உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் செல்கிறீர்கள். உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைப்பற்றி மட்டுமே மருத்துவரிடம் கூற முடியும். மாறாக, எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்க வேண்டும் அல்லது எந்த மாதிரியான மருந்துகளை கொடுக்கவேண்டும் என்பதையெல்லாம் சொல்ல முடியாது. அவற்றையெல்லாம் தீர்மானிக்க வேண்டியது மருத்துவரே. அதுபோல, பிரச்சினைகளை மட்டுமே பணியாளர்களிடம் கொடுங்கள். மேலும், முடிந்தவரை அவர்களை சுதந்திர மாகச் செயல்பட அனுமதியுங்கள். ஒரு செயலுக்கான வழிமுறைகளை அவர்களாகவே அமைத்துக்கொள்ளும்போது, அதில் அவர் களுக்கு முழுமையான ஈடுபாடும், எதிர்வரும் சிக்கல்களை முன்கூட்டியே அறிவதற்கான வாய்ப்பும் அதிகளவில் கிடைக்கும்.

பணியாளர்களோ அல்லது நம்மைச்சுற்றி உள்ள மற்றவர்களோ, யாராக இருந்தாலும் அவர்களுக்கான மதிப்பு, அங்கீகாரம், சுதந்திரம் ஆகியவற்றை அளிக்கும்போது மட்டுமே, முன்னேற்றத்திற்கான பல புதிய சிந்தனைகளும், திட்டங்களும் தோன்றிக்கொண்டே இருக்கும்.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x