

உலக பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார். தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க், கூகுள் நிறுவனர் செர்கி பிரின், லாரி பேஜ் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி அம்பானி முன்னேறியுள்ளார்.
உலகின் பணக்காரர்கள் வரிசையில் 6-வது இடத்துக்கு முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார். கடந்த வாரம் வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பை விட, முகேஷ் அம்பானியின் சொத்து அதிகரித்து அவரை பின்னுக்குத் தள்ளி முன்னேறினார். முகேஷ் அம்பானியின் சொத்து கடந்த வாரத்தில் 7,240 கோடி டாலரானது.
ஃபேஸ்புக் இன்கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அங்கமான ஜியோ-வில் முதலீடு செய்தன. இதன் காரணமாக ரிலையன்ஸ் பங்கு விலைகள் உயர்ந்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் எரிசக்தி துறையில் இருந்து படிப்படியாக டிஜிட்டல் வர்த்தகத்துக்கு மாறி வருகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகை நோக்கி தனது கவனத்தை செலுத்தி வருகிறது.