கட்டுமானத் தொழிலை ஊக்குவிக்க வேண்டும்; தமிழக அரசுக்கு கிரெடாய் அமைப்பு வலியுறுத்தல்
தமிழகத்தில் கட்டுமானத் தொழிலை ஊக்குவிக்க தமிழக அரசு உதவ வேண்டுமென இந்திய கட்டுமானத் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (கிரெடாய்) வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கிரெடாய் அமைப்பின் கோவை கிளைத் தலைவர் சுரேந்தர் விட்டல், செயலர் ராஜீவ் ராமசாமி ஆகியோர் கூறியதாவது:
"கரோனா ஊரடங்கு காரணமாக கட்டுமானத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இச்சூழலில், கட்டுமானத் தொழிலை ஊக்குவிக்க தமிழக அரசு உதவ வேண்டும்.
மனை மற்றும் கட்டிட அங்கீகாரம் அளிக்க தற்போது குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் ஓராண்டு காலமாகிறது. இதற்கு காலக்கெடு நிர்ணயித்து, ஒரே முறையில் அனைத்து விசாரணைகளையும் மேற்கொண்டு, அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும். தற்போதுள்ள 15 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள அனைத்து கட்டிடங்களின் அங்கீகாரத்துக்காக சென்னை டிடிசிபி அலுவலகத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் பயணங்களைத் தவிர்க்கவும், நோய் தொற்றிலிருந்து காக்கவும் 2 லட்சம் சதுர அடி வரையிலான கட்டுமானங்களுக்கான அங்கீகாரத்தை, கோவை உள்ளூர் திட்டக் குழுமத்திலேயே அளிக்க அனுமதி வழங்க வேண்டும்.
கட்டிட அங்கீகாரத்துக்கு உள்ளூர் பஞ்சாயத்துகளில் தடையில்லா சான்று பெற வேண்டியுள்ளது. இது, பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுக்கிறது. எனவே, ஒற்றைச் சாளர ஆன்லைன் முறையில் அங்கீகாரம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் பெருநகர திட்டக் குழுமம் போன்ற அலுவலகத்தை அமைத்து, எளிதில் அங்கீகாரம் கிடைக்கச் செய்ய வேண்டும். அதேபோல, அங்கீகார கட்டணத்தை 2018-ல் இருந்த கட்டண அளவுக்கு குறைக்க வேண்டும். பத்திரப் பதிவு கட்டணத்தை 6 சதவீதமாக குறைக்க வேண்டும். மகளிர் பெயரில் செய்யப்படும் பத்திரப் பதிவுக்கு கூடுதலாக ஒரு சதவீதம் குறைவான கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.
மாநில அளவில் வேலையில்லா பணியாளர்களை, தமிழ்நாடு சமூக நல பாதுகாப்பு துறையின் மூலம் கணக்கீடு செய்து, அவர்களுக்கு கட்டிடத் துறையில் வேலைவாய்ப்பு வழங்குவதன் மூலம், ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வுகாணலாம். அங்கீகாரத்துக்கு மாறாக கட்டப்படும் கட்டிடங்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தொய்வு நிலையால், பல வாடகைதாரர்கள் வாடகை தர மறுத்து வருகின்றனர். எனவே, அடுத்த ஓராண்டுக்கு சொத்து வரியை உயர்த்தக்கூடாது. மேலும், ஏப்ரல் முதல் டிசம்பர் வரை சொத்து வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளோம்"
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
