

ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து படிப்படியாக வெளியேற முடிவு செய்ததையடுத்து, இந்தியாவில் தனது உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஆப்பிள் போன்களை உற்பத்தி செய்யும் ஃபாக்ஸ்கான், தமிழகத்தில் உள்ள தனது உற்பத்தி ஆலையில் ஒரு பில்லியன் டாலர் (ரூ.7,515) கோடி முதலீடு செய்ய இருப்பதாகக் கூறியுள்ளது.
இந்த முதலீடானது இந்திய அரசின் புதிய உற்பத்தி சார் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் செயல்படுத்த உள்ளதாகவும் ஃபாக்ஸ்கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள 5 வெளிநாட்டு நிறுவனங்களில் ஃபாக்ஸ்கானும் ஒன்றாகும்.
மேலும், இந்த முதலீட்டு திட்டத்தின் மூலம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் உற்பத்தி நிலையத்தில் 6,000 வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இந்த ஆலையில் ஆப்பிளின் உயர் ரகத்தில் விலை குறைவான ஐபோன் எக்ஸ்ஆர் மாடலும் ஐபோன் எஸ்இ மாடலின் முந்தைய வெர்ஷனும் மற்றும் உலகளவில் நிறுத்தப்பட்டுவிட்ட சில விலை குறைவான மாடல்களும் உற்பத்தி செய்யப்படும்.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் லியு யங் வே இது குறித்து கூறுகையில், ‘‘இந்தியாவில் அடுத்தடுத்து எங்கள் தொழில் திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் படிப்படியாக ஈடுபட்டு வருகிறோம். சிலமாதங்களில் முதலீட்டு திட்டம் தொடர்பான முழு அறிக்கையும் வெளியிடுவோம்” என்றார்.